ராணுவ வீரரின் வீட்டை அபகரிக்க முயற்சிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள்: போலீசில் ராணுவ வீரரின் மனைவி புகார்

3 November 2020, 10:14 pm
Quick Share

வேலூர்: தன்னையும் தன் கணவரையும் கடுமையாக தாக்கி வீட்டை அபகரிக்க முயன்று 3 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராணுவ வீரரின் மனைவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

வேலூர் மாவட்டம்,கம்மவான்பேட்டை அருகேயுள்ள சலமநத்தம் அரிஜன காலனியில் வசித்து வருபவர் வெண்மதி. இவரின் கணவர் சங்கர் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது சங்கர் மற்றும் அவரின் மனைவி வெண்மதி மகன் சந்திரன் மூவரும் அவர்களுக்கு சொந்தமாக சலமநத்தத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இதில் வெண்மதியின் உறவினர்களான பழனி அவரின் வீட்டை குறைந்து விலைக்கு தருமாறு வெண்மதியையும், அவரின் கணவர் சங்கரையும் மிரட்டி வீட்டை எழுதி வாங்க முயன்றுள்ளார். ஆனால் இவர்கள் வீட்டை தர முடியாது என திட்டவட்டமாக கூறியதால்,

பழனி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகி பாஸ்கர் மற்றும் கர்ணா ஆகிய இருவரையும் அழைத்து சென்று வெண்மதியையும் சங்கரையும் மிரட்டி வீட்டை எழுதி வாங்கி மீண்டும் முயற்சி செய்துள்ளார். அது தோல்வியில் முடிந்ததால் ஆத்திரத்தில் பழனி, பாஸ்கர், கர்ணா, அரவிந்த், ரஞ்சனி பாத்திமா உள்ளிட்ட 11 பேர் அடங்கிய விடுதலை சிறுத்தைகள் கும்பல் வெண்மதியை கடுமையாக தாக்கியதுடன் வெண்மதி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்து சங்கர் சென்னை ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கடந்த 30-10-2020 அன்று வெண்மதியும் அவரின் மகன் சந்திரனும் வேலூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் உதவி ஆய்வாளர் ஏழுமலை புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்யும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும்,

தன்னை உன் கணவன் என்ன செத்தாபோயிட்டான் என கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி காவல் நிலையத்திலிருந்து விரட்டியதாக வெண்மதி வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் செல்வகுமாரிடம் புகார் அளித்துள்ளார். அதில், தன்னை தாக்கி சொத்தை அபகரிக்க முயன்று நகையை பறித்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் மீதும் அவர்களுக்கு துணையாக செயல்படும் காவல்துறை உதவி ஆய்வாளர் ஏழுமலை மீது உரிய நடவடிக்கை எடுத்து தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்குமாறும் ராணுவ வீரரின் மனைவி அப்புகாரில் கூறியுள்ளார்.

Views: - 24

0

0