159 நாட்களுக்கு பிறகு சமயபுரம் மாரியம்மன் கோயில் நடைதிறப்பு: சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதி…
1 September 2020, 3:24 pmதிருச்சி: 159 நாட்களுக்கு பிறகு சமயபுரம் மாரியம்மன் கோயில் நடைதிறக்கப்பட்டதையொட்டி சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தமிழகத்திலே மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலமாகும்.இக்கோயிலுக்கு திருச்சி மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து தரிசனம் செய்ய பக்தர்கள் வருவார்கள். கொரோனா வைரஸ் தொற்றால் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் நடை அடைக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடந்த மார்ச் 25 ந்தேதி முதல் சமயபுரம் கோயில் நடை அடைக்கப்பட்டது. பக்தரகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஒருசில பக்தர்கள் கோயில் வெளியே நின்று அம்மனை தரிசனம் செய்து விட்டுச் சென்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை தளர்த்தி வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதியளித்தது.அதன்படி பக்தர்களை அனுமதியளிக்கும் வகையில் நேற்று கோயில் நிர்வாகம் வளாகத்தை சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு கோயில் நடைதிறக்க ஆயத்தமானார்கள். இதன்படி இன்று காலை விக்னேஷ்வரா பூஜை,புண்ணியார்சனம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தி கோயில் நடை திறக்கப்பட்டது.பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு 5 அடி தூர சமூக இடைவெளியுடன் பக்தர்களை தரிசனத்திற்க்கு அனுமதியளித்தனர். 159 நாட்களுக்கு பிறகு கோயில் நடை திறக்கப்பட்டதால் அம்மனின் பக்தர்கள் உற்சாகமாக வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு சென்றனர். ஒரு வைரஸ் தொற்றால் இத்தனை நாட்கள் கோயில் நடை அடைக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
0
0