கோவை எஸ்.பி.ஐ வங்கியில் ‘லோன் மேளா’: துணை பொது மேலாளர் துவக்கி வைத்தார்!!

Author: Aarthi Sivakumar
3 September 2021, 1:15 pm
Quick Share

கோவை: கோவை எஸ்.பி.ஐ தலைமை வங்கியில் கார் மற்றும் வீடு வாங்குவதற்கான ‘லோன் மேளா’ நடைபெற்று வருகிறது.

கோவை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள எஸ்.பி.ஐ தலைமை வங்கியில் கார் மற்றும் வீடு வாங்குவதற்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம் இன்று தொடங்கியது.

இதில் 40க்கும் மேற்பட்ட பில்டர்கள் மற்றும் கார் டீலர்கள் பங்கேற்று ஸ்டால் அமைத்துள்ளனர். இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.15 லட்சம் முதல் மூன்று கோடி ரூபாய் வரை வீடு வாங்க கடனுதவி வழங்கப்படுகிறது.

இந்த கடன் வழங்கும் முகாமை எஸ்.பி.ஐ வங்கியின் துணை பொது மேலாளர் திலீப் சிங் யாதவ் இன்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

எஸ்.பி.ஐ கோவை மண்டலம் சார்பில் இந்த கடன் வழங்கும் முகாம் நடத்தப்படுகிறது. இன்று முதல் வரும் 5-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த முகாம் நடைபெற உள்ளது.

கடன் உதவி தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க எஸ்.பி.ஐ வங்கி தயாராக இருக்கிறது. எங்கள் வங்கியால் தேர்வு செய்யப்பட்ட பில்டர்கள் மற்றும் கார் டீலர்கள் இங்கு ஸ்டால் அமைத்துள்ளார்கள்.

மேலும், சில குறிப்பிட்ட வகை கார்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட உள்ளன.

கார் வாங்குவதற்கு 7.5 சதவீதத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது. வீட்டுக்கடன் 6.7 சதவிகித வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. யோனோ செயலி மூலம் கடனுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வட்டியில் இருந்து 0.5 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் மகளிருக்கு சிறப்பு சலுகையாக 0.5 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 238

0

0