பணிக்கு சென்று மாயமான சிஆர்பிஎப் வீரர்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு…
19 August 2020, 3:19 pmமதுரை: சண்டிகரில் சி.ஆர்.பி.எப். யில் பணிபுரியும் நெல்லையை சேர்ந்த அண்ணாத்துரை என்பவரை கண்டுபிடிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த தெய்வகனி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது கணவர் அண்ணாத்துரை மகாராஸ்டிராவில் சிஆர்பிஎப் பாதுகாப்பு படையில் பணிபுந்தார். மகாராஸ்டிராவில் இருந்து சண்டிகர் பகுதிக்கு இடமாற்றம் செய்யபட்டார். பணியிட மாற்றம் செய்யபட்ட நிலையில் 20 நாட்கள் விடுமுறை எடுத்து திருநெல்வேலி வந்தார். 20 நாட்கள் விடுமுறை முடிந்து 2019 ஜூன் 29 ஆம் தேதி திருக்குறள் ரயிலில் சண்டிகர் சென்றார். 2019 ஜூலை 1 ஆம் தேதி டெல்லி வந்துவிட்டதாக போனில் பேசினார்.
ஜூலை 2 ஆம் தேதி வாட்ஸ் ஆப்பில் பேசினார். அதன் பிறகு எந்த தொடர்பும் இல்லை. ஜூலை 2 ஆம் தேதி டெல்லியில் இருந்து எஸ்.ஐ. பிரோத் குமார் என்னை போனில் தொடர்பு கொண்டு தங்கள் கணவரது பொருள்கள் வந்துள்ளது ஆனால் கணவர் வரவில்லை என தகவல் கூறினார். எனது கணவர் எங்கு உள்ளார் என்ற தகவல் தெரியாததால் நானும் எனது குழந்தைகளும் மிகுந்த மன உளைச்சலுடனும், கவலையுடனும் உள்ளோம்,
எனவே சிஆர்பிஎப் பாதுகாப்பு படையில் பணிபுரியும் எனது கணவரை கண்டுபிடித்து ஒப்படைக்க உத்தரவிடுமாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.