எலக்ட்ரிக் ஷாக் அடித்து பாதிக்கப்பட்ட தாய், மகள்.. இழப்பீடு வழங்க அரசுக்கு உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு…

26 August 2020, 4:21 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

மதுரை: மதுரையில் எலக்ட்ரிக் ஷாக் அடித்து பாதிக்கப்பட்ட 2 வயது சிறுமிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கவும், அவரது தாயாருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை செல்லுரை சேர்ந்த அசோக் உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், எனது மனைவி விசாலாட்சி, மற்றும் எனது 2 வயது மகள் துர்காஸ்ரீ . இவர்கள் இருவரும் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தல்லாகுளம் உலகத் தமிழ் சங்க கட்டடத்திற்கு பின் புறம் அமைந்துள்ள எனது மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தனர். அப்போது உலகத் தமிழ் சங்க கட்டிடப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது இப்பகுதியில் குடியிருப்பவர்களை கருத்தில் கொள்ளாமல், கட்டிட வேலை பார்த்தவர்கள் மின்சார வயரை தாழ்வாக அமைத்திருந்தனர். அப்போது இப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த எனது 2 வயது மகள் துர்காஸ்ரீ மின் வயரை தொட்டு ஷாக் அடித்ததில் பலத்த காயமடைந்த அலறித் துடித்தாள்.

சத்தத்தை கேட்டு அவரை காப்பாற்ற சென்ற எனது மனைவி விசாலாட்சியும், எனது மனைவியின் அக்காள் மகன் ராமர் என்ற 10 வயது சிறுவன் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் மூவரும் பலத்த காயமடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதில் எனது மனைவி மற்றும் மகளுக்கு உடலில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி G.R.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது,இதனை விசாரித்த நீதிபதி, மின்சாரம் தாக்கியதில் பாதிப்படைந்த சிறுமி துர்காஸ்ரீ க்கு இழப்பீடாக ரூ 2 லட்சமும், அவரது தாயார் விசாலாட்சிக்கு ரூ. 25 ஆயிரமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.