விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் மரணம்

17 September 2020, 10:37 pm
Quick Share

மதுரை: திருமங்கலம் அருகே விசாரணைக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துசென்ற கல்லூரிமாணவன் ,
மலையில் உள்ள மரத்தில் தூக்கிட்டு மர்மான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த பேரையூர் தாலுகாவில் உள்ள அணைக்கரைப்பட்டி கிராமத்தைச்சார்ந்த இதயக்கனி 25 என்பவருக்கும் அதே கிராமத்தைச் சார்ந்த புனிதா (20)என்ற இளம்பெண்ணிற்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது .அன்று முதல் இருவரும் கிராமத்தில் இருந்து வெளியேறி மாயமாகினர். இந்நிலையில் புனிதாவின் பெற்றோர்கள் சாப்டூர் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என்று கோரி புகார் தெரிவித்ததையடுத்து, காவல்துறையினர் சம்பவம் அறிந்து இதயக்கணியைதேடி வீட்டுக்கு வந்தபோது , அங்கு இதயக்கனி இல்லை.

பின்பு நேற்று  காவல்துறையினர் இதயக்கனி வீட்டிற்கு வந்து அவரது சகோதரர் கல்லூரி மாணவன் ரமேஷை (19) விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இரவு முழுவதும் ரமேஷ் வீடுதிரும்பவில்லை. இந்நிலையில் கிராமத்திலுள்ள 150 மீட்டர் உயரமுடைய மலையின் மீது உள்ள மரத்தில் கயிற்றில் தொங்கியபடி ரமேஷ் உடலைக் கண்ட அக்கிராம மக்கள் உடனடியாக ரமேஷ் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு ஒன்று திரண்ட 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விசாரணைக்குச் சென்ற ரமேஷ் – ஐ கொலைசெய்த காவல்துறையினர்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். காவல் நிலையத்தில் உள்ள சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன் உட்பட 5 பேரை வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்யும் வரை ரமேஷின் உடலை அப்புறப்படுத்த விட மாட்டோம் என்று கூறி 5 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் .
சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து பேரையூர் பகுதியில் அணைக்கரைப்பட்டி கிராமத்தில் கல்லூரி மாணவனை காவல்துறையினரே கொலை செய்திருக்கலாம் என்று கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பதட்டமான சூழ்நிலையில் உள்ளது.