மதுரைக்காரன் கட்சியின் தலைவனுக்கு விசுவாசமாக இருப்பான்: கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ பேட்டி

26 January 2021, 11:26 pm
Quick Share

மதுரை: எதையும் வித்தியாசமாக செய்யும் மதுரைக்காரன் பாசக்காரன், ரோசக்காரனோடு மட்டுமின்றி பற்றுகொண்ட கட்சியின் தலைவனுக்கு விசுவாசமாக இருப்பான் என மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார்.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு மண்டப திறப்பு விழாவிற்கு மதுரை மாநகர் கழகம் சார்பாக இரண்டாம் கட்டமாக 18 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயிலில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக மற்றும் பொதுமக்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தலைமையில் மதுரை ரயில் நிலையத்தில் ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம் மற்றும் மேலதாளங்களோடு இரவு 8 மணிக்கு புறப்பட்டு நேராக சென்னைக்கு சென்று,

பின்னர் கட்சியினர் விழாவில் கலந்து கொண்ட பின்னர் மீண்டும் நாளை மாலை 5 மணிக்கு அதே ரயில் மூலமாக திருப்பி அழைத்து வரபடவுள்ளனர். ரயிலில் பயணம் செய்யும் தொண்டர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளோடு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சியினருடன் கூட்டுறவுத்துறை அமைச்சரும் ரயிலில் புறப்பட்டார். முன்னதாக மதுரை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது;- தமிழக வரலாற்றில் எந்தவொரு அரசியல் இயக்கமும் தலைவரின் நிகழ்ச்சிக்கும் இது மாதிரி புகை வண்டியை எடுத்தாக வரலாறு இல்லை.

ஜெ உடல்நலம் பெற்று வர ஆயிரக்கணக்கான மக்கள் காவடி, அலகு குத்தினோம், ஒரு மாதம் தொடர் பிரார்த்தனை செய்தோம். ஆனால் தற்போது ஜெயலலிதா இல்லை. ஆனால் ஜெயலலிதா நினைவிடத்தை உலகமே வியக்கும் வண்ணம் முதல்வர் கட்டிக்கொடுத்துள்ளார். மதுரையிலிருந்து பேருந்துகள் மூலமும், தற்போது ரயிலில் மூலமும் 10,000 பேர் வரையில் செல்கிறோம். நானும் பேரன்களோடு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்பதற்காக என்னுடன் வருகிறார்கள்.

நான் பொதுவாக இயக்கத்திற்கு ஏற்றுக்கொண்ட கொள்கையை பெரிது என நினப்பவன். நிறம் மாறிய பூக்களாக இருக்கக்கூடாது. ஜெயலலிதாவிற்கு வித்தியாசமாக செய்ய நினைத்தே இதை செய்தேன். தற்போது எனது சொந்த செலவில் ரயிலில் தொண்டர்களை அழைத்துச்செல்கிறேன். இந்த ரயில் பயணத்தை விமர்சனம் செய்பவர்கள் நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள். மதுரைக்காரன் எதை செய்தாலும் வித்தியாசமாக செய்பவன். ஆழமாக செய்வான். ஆரோக்கியமாக செய்பவன். தாய் மீது பாசம் கொண்டவன் விசுவாசமாக இருப்பான். மதுரைக்காரன் எப்போதும் அப்படியே இருப்பான் என்று தளதளத்த குரலில் பேசினார்.

Views: - 0

0

0