வீட்டை காலி செய்ய சொன்னதால் ஆத்திரம்: 9 மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைப்பு – தீக்காயத்தால் ஒருவர் பலி

Author: Udayaraman
13 October 2020, 3:16 pm
Quick Share

தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோட்டில், கிளியோபாட்ரா தியேட்டர் அருகில் நடராஜன்  என்பவருக்கு சொந்தமான காம்பவுண்டில் 20 வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டில் நடராஜன் மகன் அண்ணாமலை (42) என்பவர் மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் டூவீலர் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். அந்த காம்பவுன்டில் குடியிருந்த மரியஅந்தோணி தினேஷ் மென்டிஸ் (46) என்பவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து அங்கு குடியிருப்பவர்களிடம் தகராறு செய்துள்ளார்.

இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அவரை வீட்டை காலி செய்ய வைத்துள்ளனர்.  இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்த அவர் நேற்று இரவு 11 மணியளயவில் குடிபோதையில் அங்கு வந்து தகராறு செய்துள்ளார். மேலும் காம்பவுண்டிற்குள் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்துள்ளார். இதில் 9 பைக்குகள் மளமளவென தீப்பற்றி எரிந்தது. மேலும் அண்ணாமலை வீட்டிற்குள்ளும் தீ பரவியது. தூங்கிக் கொண்டிருந்த அண்ணாமலை தீக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தீவிபத்தில் அவரது மகன் நித்தின் (8) காயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.  

மாடியில் உறங்கியதால் அவரது மனைவி கங்கா தேவி மற்றும் மற்றொரு மகன் நிகில் (6) ஆகியோர் உயிர்தப்பினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரி சங்கர் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து  சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது தொடர்பாக தென்பாகம் காவல் ஆய்வாளர் ஆனந்தராஜன், மரியஅந்தோணி தினேஷ் மென்டிஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், டவுண் துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 31

0

0