லாரியை திருடி டிமிக்கி காட்டிய திருடர்கள்: இரண்டு ஆண்டுகளுக்குப் பின் போலீசாரிடம் சிக்கினர்

Author: Udhayakumar Raman
1 July 2021, 6:31 pm
Quick Share

திருச்சி: சமயபுரம் நால் ரோட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் லாரியை திருடிச் சென்ற இரண்டு திருடர்கள் போலீசாரிடம் சிக்கி சிறைக்குச் சென்றனர்.

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை மெயின் ரோட்டில் வசிப்பவர் குமாரசாமி மகன் ராதாகிருஷ்ணன்(56) இவர் சொந்தமாக டிப்பர் லாரி ஒன்றை வைத்து ஓட்டி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ந்தேதி தனது லாரியில் கொண்டு வந்த சரக்கை சமயபுரம் அருகே உள்ள அக்கரைபட்டியில் இறக்கி உள்ளார். பின்னர் வரும் வழியில் லாரியை சமயபுரம் நால்ரோட்டில் நிறுத்திவிட்டு சமயபுரத்தில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.பின்னர் அடுத்த நாள் திரும்பி வந்து ராதாகிருஷ்ணன் பார்த்தபோது மர்மநபர்கள் யாரோ லாரியை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சமயபுரம் காவல் நிலைத்தில் 9-06-19 அன்று புகார் கொடுத்துள்ளார்.

புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சமயபுரம் போலீசார் லாரியை தேடி வந்தனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் போலி நம்பர் பிளேட்டுகளுடன் இருந்த இரண்டு லாரியை போலீசார் மீட்டு விசாரணை செய்ததில் திருடப்பட்ட லாரிகளில் ஒன்று இரண்டு வருடத்திற்கு முன்பு சமயபுரத்தில் திருடப்பட்ட லாரி என தெரிய வந்தது. மேலும் விசாரணையில் லாரியை திருடியவர்கள் கோவை மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் லாரியை திருடிவிட்டு தப்பிச் சென்ற இரண்டு திருடர்களை பிடித்து,

விசாரணை செய்ததில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அய்யனார்குளத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் 24 வயதான ராஜேஷ் மற்றும் இளையான்குடி சொக்கப்படப்பூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் 32 வயதான அன்புமணி என தெரியவந்தது. பின்னர் இருவர் மீதும் ஜீன் 29 ந்தேதி வழக்கு பதிவு செய்தனர்.பின்னர் போலீசார் கைது செய்து திருச்சி ஜேஎம்3 குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி துறையூர் கிளைச் சிறைச்சாலையில் அடைத்தனர்.

Views: - 199

0

0