சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூச தெப்ப திருவிழா…

27 January 2021, 10:33 pm
Quick Share

திருச்சி: சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தைபூசத் தெப்பத்திருவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் அம்மன் தெப்பத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து இரவு வீதி உலா வந்து காட்சியளித்தார்.

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் ஆகும். இக் கோயிலின் தைப்பூசத் திருவிழா இம் மாதம் 19 ம் தேதி காலை 7 மணிக்கு கோயிலின் பிரகாரத்தில் உள்ள தங்க கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சமயபுரம் மாரியம்மன் படம் தாங்கிய தைப்பூசக் கொடியினை மந்திரங்கள், மேளதாளங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து 20 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை தினசரி காலை 10 மணிக்கு கோயிலிருந்து அம்மன் பல்லாக்கில் எழுந்தருளி திருவீதி உலாவும், மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 7 மணிக்கு மஹா தீபாராதணையும் இரவு 8 மணிக்கு அம்மன் தினசரி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று,

இரவு 9 மணிக்கு அம்மன் மூலஸ்தானம் அடைந்தார். 9 ம் திருநாளான 27 ம் தேதி காலை 10 மணிக்கு திருக்கோயிலிருந்து அம்மன் பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று, மாலை 5 ம’ணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் தெப்பத் தேரில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் இரவு 11 மணிக்கு திருவீதி உலா வந்து ஆஸ்தான மண்டபம் அடைந்தது. 10 ம் நாளான இன்று 28 ம் தேதி காலை 8 மணிக்குள் அம்மன் கோயிலிருந்து தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லாக்கில் எழுந்தருளி நொச்சியம் வழியாக திருக்காவிரி சென்றடைதலும், மாலை 3 மணிக்கு தீர்த்த வாரி கண்டருளுதலும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை சீரங்கம் அரங்கநாதரிடமிருந்து சீர் பெறும் நிகழ்ச்சியும்,

அதிகாலை 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகமும், அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 11 ம் நாளான 29 ம் தேதி காலை 6 மணிக்கு வடதிருக்காவிரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக நடைபாதை உபயங்கள் கண்டருளி இரவு 10 மணிக்கு அஸ்தான மண்டபம் சேருதலும், இரவு 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், இரவு 12 மணிக்கு கேடயத்தில் அம்மன் திருவீதி உலா வந்து திருக்கோயில் சேர்ந்து அர்த்தஜாம பூஜை நடைபெற்று திருக்கோயில் நடை சாத்துதல் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கே.பி. அசோக்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Views: - 0

0

0