ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கிய அமைச்சர்

12 September 2020, 10:56 pm
Quick Share

மதுரை: மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் 2020-ஆம் ஆண்டு சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார்.

மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவின்போது 2020-ஆம் ஆண்டு சிறந்த ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசுகையில், இந்த அருமையான விழாவின் மூலமாக நல்லாசிரியர் விருதுகளைப் பெறுகின்ற நன்மக்களுக்கு, அங்கையற்கன்னி மீனாட்சியின் அருளோடும், ஆசியோடும், இந்த மண்ணிலே என்றென்றும் நிலைத்து நிற்கும் புகழைப் பெற்றிருக்கின்ற, மாணவச் செல்வங்களுக்கு ஒரு மாற்றத்தை உருவாக்கிக் கொடுத்த அம்மாவின் சார்பாக வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருத்தனியில் பிறந்து உலகத்தை ஆளுகின்ற வல்லமை படைத்த, அறிவால், ஆற்றலால் ஆசிரியராக பணியாற்றி, மிகச் சிறந்த அறிவுநுட்பத்தால் பொதுப்பணியால் சிறந்து விளங்கிய டாக்டர் இராதகிருஷ்ணன் அவர்களின் பெயரால், அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினவிழா கொண்டாடப்படுகிறது. இது உண்மையில் பாராட்டதக்கது, போற்றத்தக்கது என்பது ஒரு பக்கம் இருப்பினும் 1962 முதல் மத்திய அரசால் நல்லாசிரியர் விருது வழங்குவது நமக்கெல்லாம் பெருமைக்கு, பெருமை சேர்க்கக்கூடியது. பவணந்தி முனிவர் எழுதிய நன்நூலில் உலக அறிவும், உயர்ந்த குணமும் உடையவனே ஆசிரியர் என குறிப்பிட்டுள்ளார். சுவாமி விவேகானந்தர், தனது ஆன்மாவை மாணவர்களுக்கு மாற்றி அமைக்கும் வல்லமை பொருந்தியவர்கள் ஆசிரியர்கள் என குறிப்பிடுகிறார். ஸ்ரீனிவாச ராமானுஜர் புத்தகங்களை பார்த்த அவரது மாமா, அவற்றை ஆசிரியருக்கு அனுப்பினார். அவரோ ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பினார். அப்பல்கலைக்கழகம் இருவரையும் அழைத்தது.

கணித மேதையின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தியவர் ஆசிரியரே. இளைஞர்களின் கனவு நாயகர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களும் தனக்கு வழிகாட்டிய கலங்கரை விளக்கம் தனது ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் என குறிப்பிட்டுள்ளார். விவேகானந்தருக்கு வாய்த்த ஆசிரியர் இராமகிருஷ்ண பரமஹம்சர் அல்லவா? அதனால் தான் அண்ண சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே புனிதமான பணி என்றார் பாரதியார். உலகத்தையே ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த மாவீரன் அலெக்சான்டரை பார்த்து உலகத்தை வெல்ல எப்படி முடிந்தது என கேட்டதற்கு, நான் உலகிற்கு வந்ததற்கு காரணம் என் பெற்றோர், உலகம் என்னிடம் வந்ததற்கு காரணம் எனது ஆசிரியர் அரிஸ்டாட்டில் என்றார் அலெக்சாண்டர். மாதா, பிதா இவர்களுக்கு இணையாக குறிப்பிடுவது குருவைத்தான். இதைவிட சிறப்பு ஆசிரியர்களுக்கு வேறென்ன இருக்க முடியும். ஆசிரியர்கள் அறிவைத் தேடுவதில் மாணவர்களுடன் சக பயணியாக பயணிக்க வேண்டும்.

காலத்திற்கு ஏற்ப தன்னை தகுதிபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு மாணவன் தவறு செய்தால் அவனது வாழ்க்கை மட்டுமே பாதிக்கப்படும். ஒரு ஆசிரியர் தவறு செய்தால் நாட்டின் வளர்ச்சியே பாதிக்கப்படும். எனவே ஆசிரியர்கள் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அம்மாவின் அரசு பள்ளிக் கல்வித்துறையில் நிகழ்த்திவரும் சாதனைகள் பின்வருமாறு. பள்ளிக் கல்வித்துறைக்கு 2020-21 ஆம் ஆண்டில் ரூ.34,183.73 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 2019-20 ஆம் ஆண்டு ஒதுக்கீடான ரூ.28,757.62 கோடியை விட ரூ.5,426.11 கோடி கூடுதலாகும். 2020-21 ஆம் ஆண்டு உயர்கல்வித்துறைக்கு ரூ.5,024.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடக்க கல்வியில் மாணவர் நிகர சேர்க்கை 99.88 சதவிகிதமாகவும், இடைநிற்றல் 0.8 சதவிகிதமாகவும் குறைந்துள்ளது. பள்ளி மாணாக்கர்களுக்கு 16 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

2011-12 முதல் 2018-19 வரை 53,06,528 மடிக்கணினிகள் ரூ.6,982.83 கோடி மதிப்பிலும், 2011-12 முதல் 2019-20 வரை 54,72,662 மதிவண்டிகள் ரூ.1,938.64 கோடி மதிப்பிலும், 10 மற்றும் 11 வகுப்பில் இடைநிற்றல் மாணவர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகையாகவும், 12 வகுப்பில் இடைநிற்றல் மாணவர்களுக்கு ரூ.2,000 என 2011-12 முதல் 2019-20 வரை 176.56 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2,855.04 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2011-10 முதல் 2019-20 வரை 4,07,20,619 மாணவர்களுக்கு விலையில்லா சீருடைகள் ரூ.3,273.45 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. 1,423 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 604 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அம்மா விளையாட்டு திட்டம் ரூ.76.27 கோடி மதிப்பில் 12,524 ஊராட்சிகள் மற்றும் 528 போரூராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் (49.3) இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. மேலும் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் அம்மா அவர்கள் ஆசிரியப் பணியை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியர் பணி என்பது அறப்பணி, அது தன்னலம் அற்ற சேவைப்பணி, அதைவிடச் சீரிய பணி ஏதுமில்லை, அந்தப்பணி வெறும் கல்வியை மட்டும் போதிப்பதில்லை, ஒழுக்கத்தை, பண்பை, பொது அறிவை, ஆண்மீகத்தை மாணவ, மாணவியர்களிடையே எடுத்துச்செல்லும் பணி என கூறியதாக தெரிவித்தார்.

Views: - 4

0

0