குறைந்த வாடகையில் நவீன மற்றும் புதிய இயந்திரங்களை அறிமுகம் செய்த அமைச்சர்

Author: Udayaraman
5 January 2021, 3:49 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்ட வேளாண்மை துறை சார்பில் குறைந்த வாடகையில் நவீன மற்றும் புதிய இயந்திரங்களை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிமுகம் செய்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த வகுரப்பம்பட்டி ஊராட்சியில் வேளாண்மை துறை மூலமாக மேட்டு பகுதியில் மானாவாரியாக அதிகமாக பயிரிடப்பட்டுவரும் சோளம் அறுவடை செய்ய, டிராக்டருடன் முன்பக்கம் இயங்கும் சோளம் தட்டை அறுவடை செய்யும் இயந்திரம் செயல் விளக்கத்தை உயர்கல்வி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகா முன்னிலையில் விவசாயிகள் அறிந்துகொள்ளும் வண்ணம் செய்து காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:- தமிழக அரசு வேளாண்மை துறை மூலம் நில மேம்பாட்டுப்பணிகள்,

நில மற்றும் நீர்வளப்பணிகளை வேளாண்மை சார்ந்த இயந்திரத்தேவைகள் போன்ற இன்றியமையாப் பணிகளை சேவை அடிப்படையில் செய்து வருகிறது. தற்பொழுது வேளாண்மைத்தொழில் விளைச்சலை இரு மடங்காக்கவும், வேளாண் பெருமக்களின் வருமானத்தை மும்மடங்காக்கவும் பல்வேறு இயந்திரத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக மண்ணை உழுவது முதற்கொண்டு, விதைகளை விதைப்பது, களை நீக்குதல், பயிர் பாதுகாப்பு செய்தல், அறுவடை செய்தல்,

அறுவடைக்குப்பின் தொழில்நுட்பம் சார்ந்த முறையில் விளைபொருட்களின் மதிப்பினை கூட்டி வேளாண் பெருமக்களின் வருமானத்தை அதிகரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கான வேளாண் இயந்திரங்கள் தற்சமயம் துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வேளாண்மை பொறியியல் துறை மூலமாக பல்வேறு திட்டங்களின் கீழ் தனிநபர், குழு மற்றும் தொழில் முனைவோர் உள்ளிட்ட பலருக்கு இயந்திரங்கள் மான்ய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் விவசாயக்கூலி ஆட்கள் கிடைக்காத நிலையில்,

பருவம் சார்ந்த பணிகளை விரைவாகவும், விளைபொருட்கள் சரியான நேரத்தில் அறுவடை செய்ய இயலாமல் பாழாகிவிடாமல் காக்கவும், இயற்கைப் பேரிடர் உணரப்பட்டுள்ள நிலையில் அதிவிரைவாகவும் வேளாண் சார்ந்த பணிகளை செய்திட பல்வேறு கருவிகள் வேளாண்மை துறை மூலம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 39

0

0