கொரோனா காலத்தில் மின்கட்டணம் பல மடங்கு உயர்வு: குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் குற்றச்சாட்டு

17 September 2020, 6:07 pm
Quick Share

புதுச்சேரி: கொரோனா காலத்தில் புதுச்சேரி அரசு தங்களுக்கு அளித்த நிவாரண நிதியை விட மின்கட்டணம் என்ற பெயரில் பல மடங்கு பணத்தை தங்களிடம் இருந்து அரசு வசூலிப்பதாக மின்கட்டண குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

புதுச்சேரியில் கொரோனா ஊரடங்கால் 6 மாத மின் கட்டணத்தை கணக்கிட்டு, மொத்தமாக மின் கட்டணம் செலுத்த மின்துறை வலியுறுத்தி வருகிறது. இந்த மின் கட்டண அளவீட்டில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். மேலும் இந்த மின்கட்டணத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதி மக்களுக்கு அதிகளவில் மின்கட்டண தொகை வந்துள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரிமணிகண்டனிடம் புகார் அளித்தனர்.

இதனையடுத்து மின்கட்டணம் தொடர்பான குறை கேட்பு முகாமிற்கு சட்டமன்ற உறுப்பினர் ஏற்பாடு செய்திருந்தார். அதன்படி இன்று நடைபெற்ற குறைகேட்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு வந்துள்ள அதிகப்படியான மின்கட்டண தொகை குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்றிந்தனர். அப்போது மின் கட்டணத்துடன் மாதந்தோறும் செலுத்த வேண்டிய நிலைக்கட்டணம் மற்றும் சேவை கட்டணமும் 6 மாதத்திற்கு மொத்தமாக கணக்கிட்டுள்ளதால் மின்கட்டணம் பல மடங்கு உயர்த்திருப்பதாக தெரியவந்தது.

கொரோனா ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது போன்ற மின்கட்டண குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதை கண்டித்து அதிகாரிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை ரத்து செய்யவும் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். கொரோனா ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு கொரோனா நிவாரணமாக 2000 ரூபாய் வழங்கிவிட்டு தற்போது மின்கட்டண வசூல் என்ற பெயரில் தங்களிடம் இருந்து பல மடங்கு பணத்தை அரசு வசூலிப்பதாக குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.