இளைஞரை காரில் கடத்தி கொலை – அ.தி.மு.க பிரமுகர் மற்றும் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு!

18 September 2020, 8:27 pm
Quick Share

தூத்துக்குடி: தட்டார்மடம் வியாபாரி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பகுதியை சேர்ந்த வியாபாரி செல்வன் என்பவர், நேற்று மர்மநபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்வம் குறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் படுகொலை செய்யப்பட்ட செல்வனின் தாயார் எலிசபெத், நெல்லை மாவட்ட எஸ்.பியிடம் மனு கொடுத்தார். அந்த மனுவில், ‘’எங்களுக்கு சொந்தமான தோட்டம் படுக்கப்பத்து – காந்திகாந்தி நகர் மெயின் ரோட்டிற்கு பக்கம் இருக்கிறது.

எங்கள் தோட்டத்தின் அருகில் உள்ள நிலத்தினை எனது கொழுந்தன் சிலுவை தாசன் மற்றும் துரைராஜ் என்பவரிடமிருந்து உசரத்து குடியிருப்பை சேர்ந்த திருமணவேல் என்பவர் தனது மனைவி லிங்ககனி பெயரில் கிரையும் பெற்றுள்ளார். அவருடைய நிலத்துடன் எங்களுக்கு சொந்தமான சுமார் ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தையும் சேர்த்து கடந்த 2019-ம் ஆண்டு அடைத்துவிட்டார். இதனால் எங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக நிலத்தகராறு இருந்து வருகிறது.

சொத்து பிரச்சினையை பகையாக கொண்டு எனது இடத்தினை அதிகரிக்கும் நோக்கத்துடன் திருமண வேல் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் துணையுடன் எனது மகன்கள் செல்வன், பங்காரு ராஜன் என்ற ராஜன், பீட்டர் ராஜா, ஆகியோர் மீது பல பொய் புகார் கொடுத்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் எனது மகன்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து துன்புறுத்தி வந்தார்கள். இதற்கிடையில் திருமண வேல் எனது தோட்டத்திற்குள் நாட்டு வெடிகுண்டு வைத்து சேதப்படுத்தியது சம்பந்தமாக தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்கு வாங்க மறுத்து எனது மகன்கள் மீது தட்டார்மடம் காவல் ஆய்வாளர் பொய் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து எனது மகன் பீட்டர் ராஜா லாரியை காவல் நிலையத்தில் பிடித்து போட்டும் எனது மகனையும் அடித்து காயப்படுத்தினார்.

மேலும் எனது மகன் பங்காரு ராஜன் என்ற ராஜனை 19.1.2020 அன்று திருமணம் மற்றும் அவரது வகையறாக்கள் அடித்து காயப்படுத்தியதனால் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது,பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் எனது மகனை தட்டார்மடம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து தலைகீழாக கட்டி போட்டு கால் மற்றும் கைகளில் அடித்து சித்திரவதை செய்தும் வழக்கு பதிவு செய்து எனது மகனை சிறையில் அடைத்தார்.

ஜாமினில் வந்த எனது மகன் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் திருமண வேல் மீது சென்னை மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனால் திருமண வேலின் தூண்டுதலில் பேரில் எனது மகன்களை குண்டாசில் அடைக்க வேண்டும் என தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் எனது மகன்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து துன்புறுத்தி வந்த அதனால் எனது மகன்கள் முன் ஜாமின் வேண்டி சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்குத் தாக்கல் செய்தார்கள்.

வழக்கில் நீதியரசர் அறிவுறுத்தலின் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் எனது மகன்களை துன்புறுத்தி அதை அபிடவிட்டாக பதிவு செய்து எனது மகன் பங்காரு ராஜன் என்ற ராஜன் நேற்று முன்தினம் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதியரசர் அறிவுறுத்தலின் பேரில் நேற்று காலையில் அபிடவிட் குறித்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபம் கொண்டு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தூண்டுதலின்பேரில் நேற்று மதியம் ஒன்று முப்பது மணிக்கு குறுந்தட்டு என்பவரின் மளிகை கடை அருகே எனது மகன் செல்வன் அவனது இரு சக்கர வாகனத்தில் வந்தபோது திருமணம் அவனது சொந்த காரில் திருவேடகம் அடையாளம் தெரியாத நபர்களும் எனது மகன் செல்வனை தாக்கி அவருடைய காரில் கடத்திச் சென்று விட்டார்கள்.

அச்சம்பவம் குறித்து ராபர்ட் என்னிடம் தெரிவிக்கவே எனது மகனை தேடிக் கொண்டிருந்த நிலையில் மாலை 3 மணியளவில் தட்டார்மடம் காவலர் எனது மகன் திசையன்விளை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாக தெரிவித்தார்கள். எனது மகனைப் பார்க்க எனது மருமகள் ஜீவிதா மற்றும் மிசேல் ஜஸ்டின் உடன் திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது எனது மகன் இறந்த நிலையில் இருந்தான். அது பற்றி மருத்துவரிடம் விசாரிக்கவே நேற்று இரண்டு முப்பது மணிக்கு இழந்த நிலையில் எனது மகனை அடையாளம் தெரியாத நபர்கள் போட்டு விட்டு சென்றதாகவும் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்ததாகவும் கூறினார்.

உடனே எனது மகனை பார்த்த போது தலையில் பலத்த காயமும் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தான். ஆகவே திருமணவேல் எனது நிலத்தை அபகரிக்கும் நோக்குடன் செயல்பட, தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் அவருக்கு உதவும்நோக்கத்துடன் பல பொய் வழக்குகளை பதிவு செய்தார். அது குறித்து எனது மகன் உயர் நீதிமன்றத்தில் அஃபிடவிட் தாக்கல் செய்தான். தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் திருமணவேல் அடியாட்களுடன் அவரது காரில் எனது மகனை கடத்திச் சென்று அடித்து கொன்று திசையன்விளை அரசு மருத்துமனையில் சடலமாக போட்டு விட்டு சென்றிருக்கிறார்கள்.

எனவே தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் மற்றும் அவனது அடியார்கள் மீது வழக்கு பதிவு செய்து எனக்கும் எனது மகன்களுக்கும் பாதுகாப்பு வழங்கும்படி பணிந்து வேண்டுகிறேன்” இவ்வாறு அந்த மனுவில் கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது (107, 336, 302, 364 ) கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Views: - 8

0

0