கோவை அரசு மருத்துவமனையில் உருமாற்றம் பெற்ற கொரோனாவை கண்டறிய முடியும்.! – டீன் தகவல்

Author: Udhayakumar Raman
30 November 2021, 12:00 am
Quick Share

கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உருமாற்றம் அடைந்த கொரோனா நோய்த் தொற்றை கண்டறியும் வசதியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா உள்பட பல்வேறு நாடுகளில் புதிதாக உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் என்ற புதிய நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. தமிழகத்தில் இந்த புதிய வகை நோய்த் தொற்றைக் கண்டறியும் வசதி 12 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளனர். அதன்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலுள்ள உயிரியல் ஆய்வகத்தில் புதிய நோய்த் தொற்றை கண்டறிவதற்கான வசதியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறியதாவது:-கொரோனா நோய்த் தொற்றை கண்டறியும் ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் பயன்படுத்தப்படும் கிட்டில் ஒன்று அல்லது இரண்டு உயிரணுக்களை கண்டறிய முடியும்.

தற்போது புதிய நோய்த் தொற்றை கண்டறிவதற்காக அளிக்கப்பட்டுள்ள கிட்டில் எஸ், என் மற்றும் ஓஆர்எஃப் ஆகிய முன்று உயிரணுக்களை (ஜீன்கள்) கண்டறியமுடியும். இதில் “எஸ்” உயிரணு இல்லையென்றால் ஒமைக்ரான் நோய்த் தொற்று இருக்க வாய்ப்புள்ளது. இந்த மாதிரிகளை மீண்டும் சென்னையிலுள்ள மாநில பொது சுகாதாரத் துறை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டு ஒமைக்ரான் நோய்த் தொற்று உறுதி செய்யப்படும். முதல்கட்டமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 5 ஆயிரம் டக்பாத் கிட் வழங்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள், கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் தீவிரமாக உள்ளவர்கள், மாறுபட்ட அறிகுறிகள் உள்ளவர்களின் சளி மாதிரிகளை டக்பாத் கிட் மூலம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் இதுவரை இதுபோன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் கண்டறியப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 66

0

0