அரியலூர் ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் பறக்கவுள்ள தேசிய கொடி; கம்பம் அமைக்கும் பணி தீவிரம்

8 November 2020, 6:45 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் பறக்கவுள்ள தேசிய கொடி கம்பம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் அதிகம் நடமாடும் முக்கிய இடங்களான விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் தேசிய கொடியை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் முதல்கட்டமாக அனைத்து விமான நிலையங்களிலும் 100 அடி உயர கம்பம் அமைத்து அதில் தேசியகொடி ஏற்றப்பட்டது. இதனையடுத்து தற்போது முக்கிய ரயில் நிலையங்களில் தேசியகொடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி ரயில்வே கோட்டத்தில் முதல்கட்டமாக திருச்சி, அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட 7 இடங்களில் அமைக்க உத்தரவிட்டுள்ளது.

இதில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் கம்பம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து அரியலூர் ரயில் நிலையத்தில் 100 அடி கம்பம் அமைக்கும் பணி நடைபெற்றது. 2 டன் எடையுள்ள 100 அடி கம்பத்தை ரயில் நிலையம் முன்பு தனித்தனி பாகங்களாக கொண்டு வந்த ஊழியர்கள் அதனை ஒன்றாக பொருத்தி, கம்பத்தை நட்டுள்ளனர்.

ரயில் நிலைய வளாகத்தில் பூங்காவிற்கு முன்பு கம்பீரமான 100அடி உயரமுள்ள கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடலூர், காரைக்கால், நாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலும் விரைவில் கம்பம் நடும் பணிகள் நடைபெற உள்ளது. மத்திய அரசு அறிவிக்கும் நாளில் இக்கம்பங்களில் தேசியகொடி ஏற்றப்பட்டு பறக்கவிடப்படும் என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 100 அடி உயர கம்பத்தில் தேசியகொடி பறப்பது ரயில் நிலையத்திற்கு மேலும் அழகை கூட்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் ரயில் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Views: - 18

0

0