கிணற்றில் தவறி விழுந்த நபரை காப்பாற்ற முயன்ற சிறுவனும் உள்ளே விழுந்து தவிப்பு

20 September 2020, 5:27 pm
Quick Share

காஞ்சிபுரம்: படப்பை அருகே குடியிருப்பு கிணற்றில் தவறி விழுந்து ஹோட்டல் உரிமையாளர் உயிரிழந்தார். மேலும் அவரை காப்பாற்ற‌ கிணற்றுக்குள் குதித்த 16 வயது சிறுவனை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி இவரது மகன் குகன் ( 40 ) . பஜார் வீதியில் உணவகம் நடத்தி வந்தார். இந்நிலையில் படப்பை அண்ணாநகர் முதல் தெருவில் வசித்து வரும் அவரது அக்கா ஆதிலட்சுமி வீட்டிற்கு வந்த குகன் வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றுக்கு அருகாமையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது குகனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். இதனைக் கண்ட ஆதி லட்சுமியின் 16 வயதுடைய மகன் சதீஷ் என்பவர் துணிச்சலாக கிணற்றுக்குள் குதித்து குகனை காப்பாற்ற முயன்றார். சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

சதீஷின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்து இறந்து போன குகனின் உடலை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்ற கிணற்றில் இறங்கி சதிஷீன் உடலில் கயிறு கட்டி துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்படுத்தியது. உயிரிழந்த குகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0