புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது: 123 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்…

Author: Udhayakumar Raman
1 September 2021, 1:56 pm
Quick Share

நெல்லை: தச்சநல்லூரில் அரசால் தடை செய்யப்பட்ட 123 கிலோ குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, விற்பனையில் ஈடுப்பட்டு வந்த இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாநகர் பகுதியில் கஞ்சா குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க மாநகர காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வனசுந்தர் தலைமையிலான போலீஸார் தச்சநல்லூர் குருநாதன் விலக்கு அருகில் வாகனத்தை தணிக்கையில் ஈடுபட்ட போது, மானூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தவேரா காரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 93 கிலோ குட்கா புகையிலை பொருட்களை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து அவரிடமிருந்த 93 கிலோ குட்கா மற்றும் தவேரா காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தச்சநல்லூர் மதுரை ரோடு வடக்கு புறவழிச்சாலையில் நடைபெற்ற வாகன தணிக்கையின் போது, அதே மானூரைச் சேர்ந்த ஷேக் மைதீன் என்பவர் இருசக்கர வாகனத்தில் தடை செய்யப்பட்ட சுமார் 30 கிலோ புகையிலை பொருட்களை எடுத்துச் சென்றார்.

இதையடுத்து ஷேக்மைதீனையும் கைது செய்து அவரிடம் இருந்த 30 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் தச்சநல்லூர் பகுதியில் மொத்தம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 123 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சுரேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்ர். அப்போது அவர் பேசுகையில், நெல்லை மாநகரில் குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை தடுக்க நடவடிக்கை எடுக்கிறோம். அதன் ஒரு பகுதியாக தச்சநல்லூரில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து எனது தனிப்படையினர் அனைத்து பகுதிகளையும் கண்காணித்து வருகின்றனர்,மேலும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் அருகில் இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் எதிரிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

Views: - 149

0

0