நெல்லை மாவட்டத்திற்கு அபாயகரமான சூழல் எதுவும் இல்லை: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் உறுதி

14 January 2021, 10:17 pm
Quick Share

நெல்லை: நெல்லை மாவட்டத்திற்கு அபாயகரமான சூழல் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் மழை மானிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக நெல்லையில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்கள் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக பாபநாசம , மணிமுத்தாறு அணைகள் நிரம்பி உபரி நீர் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் தாமிரபரணயில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் விளைநிலங்கள் , குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து சேதம் ஏற்பட்டது.

இதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள சேதபாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், செய்தி மற்றும் விளப்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி. எம்.ராஜலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவினை அமைத்தார்.

இந்த குழுவினர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் செல்வி. அபூர்வா , மாவட்ட ஆட்சியர் விஷ்ணு , மற்றும் மாநகராட்சி ஆணையர் , காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகள் குறித்து இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, மேலும் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என ஆலோசனை நடத்தி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். பின்னர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த கனமழை காரணமாக பாபநாசம் சேர்வலாறு,மணிமுத்தாறு, கடநா,

ராமநதி அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால் தாமிரபரணி நதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில் இரவு பகலாக மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பாளர்கள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை காலம் என்றும் பாராமல் களத்தில் பணி செய்யும் அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள். தாமிரபரணி நதியில் 60 ஆயிரம் கன அடி உபரிநீர் சென்றாலும் பாதிப்பு இல்லாத நிலை இருக்கும். நெல்லை மாவட்டத்தில் அபாய சூழல் எதும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 23 ஆயிரம் கன அடியாக தாமிரபரணி நதியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. மலை பகுதிகளில் மழை அளவு தற்போது குறைந்துள்ளது என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் முகாம்களில் இருப்பவர்களுக்கு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. தேசிய மாநில பேரிடர் மீட்பு பணியாளர்கள் மற்றும் கடற்படை வீரர்களும் பணியில் இருந்து வருகிறார்கள். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட பயிர் சேத விபரம் கவலை அளிக்கிறது.

கடலூர் நெல்லை தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர் சேத விவரம் கணக்கீடு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை கணக்கெடுக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கபட்டுவருகிறது. நெல்லை மாவட்டத்தில் ட்ரொன் மூலம் விவசாய நில பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளனர் தாமிரபரணி நதியில் இருந்து தூத்துக்குடி விருதுநகர் மாவட்டங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டுவருகிறது. கனமழை வெள்ளத்தால் குடி நீர் உரை கிணறுகள் மூழ்கியுள்ளது.

மாற்று நடவடிக்கைகள் எடுக்க அந்ததந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறைகள் வழங்கப்பட்டுள்ளது உள்ளாட்சி துறை அமைச்சர் கவனத்திற்கு வெள்ள பாதிப்பால் ஏற்பட்ட குடிநீர் பிரச்சனைகள் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகம் முழுதும் மழைமாணிகள் அதிகரிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாஞ்சோலை உள்ளிட்ட மலை கிராமங்களில் உள்ள மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என கூறினார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் குழுவினர் நெல்லை மாநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான கருப்பந்துறை பகுதிக்கு நேரில் சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர் .

Views: - 6

0

0