புலி தாக்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு… புலியை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்ல கோரிக்கை…

31 August 2020, 7:47 pm
Quick Share

நீலகிரி: கூடலூர் சிங்காரா வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி தாக்கி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த மசினகுடி குறும்பர் காலனி பகுதியில் வசித்து வருபவர் கௌரி. இவர் மற்றும் அவருடைய கணவர் இன்று மாடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். அப்பொழுது மறைந்திருந்த புலியின் உறுமல் சத்தம் கேட்டு கௌரி தனது மாடுகளை வேறு வழியாக கொண்டு செல்வதற்கு முயன்றுள்ளார். அப்போது மறைந்திருந்த புலி அவரை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்தார். கணவன் அவருடைய சத்தத்தைக் கேட்டு பார்த்த போது அவர் அப்பகுதியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பின்னர் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் அப்பகுதி மக்கள் கூறுகையில், இதுவரை வன விலங்குகளை மட்டும் வேட்டையாடி வந்த நிலையில் தற்போது மனிதர்களையும் வேட்டையாட துவங்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே அந்த புலியை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 3

0

0