பூத்துக் கொட்டும் மூங்கில் அரிசி… சேகரிக்கும் பணியில் பழங்குடியின மக்கள்!

4 February 2021, 3:14 pm
Quick Share

நீலகிரி: கூடலூரில் 40 ஆண்டிற்கு பிறகு ஏராளமான இடங்களில் மூங்கில் அரிசி பூத்துள்ளது. மருத்துவ குணம் கொண்ட மூங்கில் அரிசி கிலோவிற்கு 800 ரூபாய் வரை கிடைப்பதால் உள்ளூரை சேர்ந்த பழங்குடியின மக்கள் அதனை சேகரிக்கும் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி முதுமலை உள்ளிட்ட வனப்பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதிகளில் மூங்கில் செடிகள் அதிகளவில் காணப்படுகிறது. இங்குள்ள மூங்கில் செடிகள் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு முக்கிய உணவாக இருந்து வருகிறது. அதேபோல உள்ளூர் பழங்குடியின மக்கள் மூங்கிலை உணவாகும், வீடுகளை கட்டுவதற்கும் பயன்ப்படுத்தி வருகின்றனர். இப்படி பல பயன்களை தரும் மூங்கில் செடிகளின் ஆயுட்காலம் 40 ஆண்டுகள் மட்டுமே. 40 ஆண்டுகள் முடிந்த மூங்கில் செடிகள் பூ பூக்க துவங்கும். பூ பூத்த சில வாரங்களில் அதில் இருந்து அரிசிகள் கொட்ட துவங்கும். பின்னர் குறிப்பிட்ட நாட்களில் மூங்கில் செடிகள் காய்ந்து அழிந்து போகும்.

இந்த நிலையில் கூடலூரின் வனம் மற்றும் ஊருக்குள் உள்ள சுமார் 50 % மூங்கில் செடிகளின் ஆயுட்காலம் முடிந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த மூங்கில் செடிகளில் பூ பூக்க துவங்கியது. தற்போது அந்த செடிகளில் இருந்து மூங்கில் அரிசிகள் கொட்ட துவங்கியுள்ளது. அவ்வாறு வனத்தை ஒட்டிய பகுதிகளிலும், சாலை ஓரங்களிலும் கொட்டி கிடக்கும் மூங்கில் அரிசிகளை சேகரிக்கும் பணியில் உள்ளூரை சேர்ந்த பழங்குடியின மக்கள் ஈடுபட்டுள்ளனர். மூங்கில் அரிசி பழங்குடியின மக்களின் முக்கிய உணவாக உள்ளது. பாரம்பரியமாக பழங்குடியின மக்கள் தங்களது உணவு வழக்கத்தில் மூங்கில் அரிசியை பயன்ப்படுத்தி வருகின்றனர். தங்களது உணவு தேவைக்கு போக மீதமுள்ள அரிசிகளை வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர்.

தற்போது கிலோவிற்கு 500 ரூபாய் வரை கிடைப்பதால் அவர்களுக்கு வருவாய் தரும் தொழிலாளகவும் இது அமைத்துள்ளது. மூங்கில் அரிசியின் மருத்துவ குணம் தெரிந்த வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேரடியாக வந்து பழங்குடியின மக்களிடம் இருந்து வாங்கி செல்கின்றனர். வனம் மற்றும் சாலை ஓரங்களில் இருந்து சேகரிக்கப்படும் இந்த மூங்கில் அரிசிகளை எடுத்து சென்று தண்ணீரில் கழுகி காய வைத்து, உரலில் இடித்து அதிலிருந்து அரிசியை எடுக்கின்றனர். அவ்வாறு எடுக்கப்படும் அரிசி சாதாரண அரிசியை போலவே சமைத்து பழங்குடியின மக்களால் உணவாக எடுத்து கொள்ளப்படுகிறது. மூங்கில் அரிசியை அரைத்து பொடியாக்கி அதனை குழந்தைகளுக்கு கூழ் காய்ச்சி கொடுக்கின்றனர். அதேபோல மூங்கில் அரிசி மாவு மூலம் தோசை, இட்லி, பலகாரம் உள்ளிட்ட உணவு வகைகளை செய்து உட்கொள்கின்றனர்.

மூங்கில் அரிசியை உணவாக எடுத்து கொள்வதால் உடலுக்கு பலம், நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதாக பழங்குடியின மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலங்களில் வனத்துறை கட்டுபாடுகள் இல்லாத போது வனப்பகுதிக்குலேயே சென்று மூங்கில் அரிசியை சேகரித்தோம். எங்களது அப்பா காலத்தில் வனப்பகுதிக்குள் சென்று மூங்கில் அரிசியை எடுத்து வந்த ஞாபகம் உள்ளது. ஆனால் தற்போது வனத்துறை கட்டுபாடுகள் காரணமாக வனப்பகுதிக்குள் சென்று எடுக்க முடிவதில்லை. எனவே தான் சாலை ஓரங்கள் மற்றும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் இருந்து மூங்கில் அரிசியை சேகரிக்கிறோம் என பழங்குடியின மக்கள் கூறுகின்றனர்.

மூங்கில் அரிசியில் பல மருத்துவ குணம் உள்ளதாக சொல்லப்படுகிறது. மூங்கில் அரிசியில் அதிகபடியான கலோரிகள் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரத சத்து, மெக்னீசியம், காப்பர், சிங், ஜின்க் உள்ளிட்ட பல சத்துக்கள் இதில் உள்ளது. மூங்கில் அரிசி சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக உள்ளதாக கூறப்படுகிறது. மூட்டு வலி, முட்டியில் நீர் கோர்த்து கொள்ளுதல், முதுகு வழி, இடுப்பு வலி உள்ளிட்டவைகளுக்கு இது மருந்தாக செயல்படுகிறது. உடல் எடையை குறைக்கவும் மூங்கில் அரிசியை உணவாக எடுத்து கொள்ளலாம் என சொல்லபடுகிறது. இப்படி பல மருத்துவ குணங்களை கொண்ட மூங்கில் அரிசி சீசன் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும். அதனை சேகரிக்கும் பணியில் தான் பழங்குடியின மக்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

Views: - 3

0

0