பல ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் வெடிமருந்து குடோனில் அதிகாரிகள் ஆய்வு

11 August 2020, 10:14 pm
Quick Share

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பண்ணபட்டி அருகே உள்ளது அஞ்சா கவுண்டன்பட்டி என்ற குக்கிராமம். அந்த கிராமத்தில் இருந்து இரண்டுகிலோ மீட்டர் தொலைவில் கரூர் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் காடு உள்ளது. இந்த காட்டு பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன் வெடிமருந்து குடோன் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது .

அவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே நிர்வாக காரணங்களினால் மூடப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு லெபனான் நாட்டில் ஏற்பட்ட வெடிகுண்டு குடோன் விபத்து உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த விபத்தின் தொடர்ச்சியாக கரூர் மாவட்டம் அஞ்சகவுண்டன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நமது ஊரில் இயங்கி வந்த வெடிமருந்து குடோனில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து பொருள்கள் முற்றிலும் அகற்றப்பட்டதா இல்லையா என்பது குறித்து மக்கள் அச்சத்துடன் பேசத் துவங்கினர்.

இதுபற்றி தகவல் அறிந்த வருவாய் கோட்டாச்சியர் பாலசுப்பிரமணி தலைமையில் அரவக்குறிச்சி வட்டாச்சியர் வேலுச்சாமி மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் வெடிமருந்து குடோன் இருந்த பகுதியை ஆய்வு செய்தனர்.


பின்னர் வருவாய் கோட்டாச்சியர் பாலசுப்பிரமணி பேசுகையில், தற்போதய நிலையில் குடோனில் இருப்பு இருப்பது போல் தெரியவில்லை. இதை வெளியில் எடுத்து செல்வது போன்ற நிகழ்வுகள் தெரியவில்லை. இருந்த போதிலும் சம்பந்தப்பட்ட வெடிமருந்து குடோன் உரிமையாளரை வரவழைத்து பூட்டியிருக்கும் அறைகளை திறந்து பார்த்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என கூறினார்.

Views: - 2

0

0