கடைகளை அகற்றிய அதிகாரிகள்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்

Author: Udhayakumar Raman
4 August 2021, 2:57 pm
Quick Share

திருவள்ளூர்:பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் முன்பாக இருந்த கடைகளை உயர் நீதிமன்ற உத்தரவில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அகற்றியபோது கடைகளை அகற்றக் கூடாது என வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற, இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டுள்ளது.இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்குச் செல்வதற்கான பாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை அப்புறப்படுத்தக் கோரி, கோயில் பரம்பரை அறங்காவலர் லோகமித்ரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேள்வி எழுப்பி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்,

காவல் கண்காணிப்பாளர், உத்துக்கோட்டை தாசில்தார் ஆகியோர் உதவியுடன், ஆக்கிரமிப்புகளை இரு வாரங்களில் அகற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து பெரியபாளையம் போலீசாரின் பாதுகாப்புடன் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் அங்கிருந்த 15 கடைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர் அப்போது கடைவியாபாரிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் கடை நடத்தி வருவதாகவும் உரியஅறிவிப்பின்றி தங்களின் கடைகளை திடீரென அகற்றும் பணியில் ஈடுபடுவதாகவும் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 73

0

0