கூடலூரில் புலி தாக்கி ஒருவர் பலி: தொடரும் உயிர் பலி

Author: Udhayakumar Raman
24 September 2021, 11:54 pm
Quick Share

நீலகிரி: கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் சந்திரன் என்பவர் புலி தாக்கி படுகாயம். புலியிடமிருந்து சந்திரனை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்
சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சமீபகாலமாக புலியின் அட்டகாசம் தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர். கடந்த 2 மாதங்களில் 9 க்கும் மேற்பட்ட கால்நடைகளை அடித்துக்கொன்ற புலியால் நாள்தோறும் அச்சத்தோடு இருந்து வரும் கிராம மக்கள் புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேற்றைய முன்தினம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொரப்பள்ளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து புலியை பிடிக்க இறந்த மாட்டு உடலுடன் கூண்டு வைக்கப்பட்டது.

இதுவரை கூண்டில் சிக்காத புலி இன்று தேவர்சோலை எனும் பகுதியில் மாடு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த சந்திரன் என்பவரை தாக்கியது. இதில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த அவர் அலறிய சப்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.இப்பகுதியில் புலி தாக்கி இறந்த இரண்டாம் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 47

0

0