அமைச்சரிடம் வழங்கப்பட்ட தேர்தலுக்கான விருப்ப மனு : திமுக நிகழ்ச்சியில் விதிமுறையை பின்பற்றாத அவலம்…

Author: kavin kumar
12 January 2022, 4:06 pm
Quick Share

திருச்சி: திருச்சி மத்திய, வடக்கு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவி தேர்தலுக்கான விருப்ப மனுவை அமைச்சர் கே.என்.நேருவிடம் தி.மு.க.வினர் வழங்கினர்

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தி.மு.க.வினரிடமிருந்து விருப்ப மனுக்கள் வாங்கும் நிகழ்ச்சி மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி,திருச்சி மத்திய மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான விருப்பமனு வாங்கும் நிகழ்ச்சி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும், தி.மு.க. முதன்மைச் செயலருமான கே. என்.நேரு தலைமை தாங்கி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க.வினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., நகரச் செயலாளர் அன்பழகன் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, வழக்கறிஞர் பாஸ்கர் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திருச்சி மத்திய மாவட்டத்தில் திருச்சி மாநகராட்சியின்
65 வார்டுகளில், 29 வார்டுகள் இடம் பெற்றுள்ளன. லால்குடி நகராட்சி மற்றும் கல்லக்குடி, சிறுகமணி, புள்ளம்பாடி , பூவாலூர் உள்ளிட்ட 4 பேரூராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுபோல திருச்சி வடக்கு மாவட்டத்தில் முசிறி, துறையூர் ஆகிய 2 நகராட்சிகளும் இடம் பெற்றுள்ளது.பேரூராட்சிகளில் காட்டுப்புத்தூர், தொட்டியம் மேட்டுப்பாளையம், பாலகிருஷ்ணம் பட்டி, உப்பிலியபுரம், தாத்தையங்கர் பேட்டை, ச.கண்ணனூர் மற்றும் மண்ணச்சநல்லூர் ஆகிய
8 பேரூராட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திருச்சி மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களிடமிருந்து ரூ.10,000, நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களிடம் ரூ.5 ஆயிரம், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களிடம் ரூ. 2,500 என விருப்ப மனுவிற்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு பெறப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ஆர்வத்தில் தி.மு.க.வினர் போட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனுக்களை வழங்கினர். இதில் திமுகவினர் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை மேலும் பலர் முககவசம் அணியவில்லை இதனால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Views: - 182

0

0