பாலம் கட்டும் பணிகளின் தற்போதைய நிலை அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய உத்தரவு…

4 September 2020, 6:46 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

மதுரை: மதுரை வாடிப்பட்டி, சோழவந்தான் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் பாலம் கட்டும் பணிகளின் தற்போதைய நிலை அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- அதில், சோழவந்தான் பகுதியிலிருந்து வாடிப்பட்டி செல்வதற்கான பிரதான சாலை உள்ளது. இந்த சாலையின் குறுக்கே ரயில் பாதை அமைந்துள்ளது. சோழவந்தானிலிருந்து ரயில் பாதையை கடந்து 40 கிராமங்கள், நான்கு வழிச்சாலை மற்றும் திண்டுக்கல், பழனி போன்ற மாவட்டங்களுக்கு செல்ல கூடிய முக்கிய பாதையாக இருந்து வருகிறது. இந்த பாதை வழியாக விவசாய பொருட்கள், பள்ளி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர்.

மேலும் இந்த ரயில் பாதையில் தினம் தோறும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் கடந்து செல்ல அரை மணி நேரம் வரை தாமதம் ஆகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கையின் அடிப்படையில் 2015-ஆம் வருடம் இரயில்வே நிர்வாகம், மாநில அரசு இணைந்து பாலம் கட்ட முடிவு செய்து பாலம் வேலை தொடங்கப்பட்டது. தற்போது கடந்த 1 வருடமாக பாலம் வேலை எதுவும் நடைபெறவில்லை மேலும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக சாலை மிகவும் மோசம் அடைந்து காணப்படுகிறது.

இப்பகுதியில் தினம் தோறும் 10 மேற்பட்ட இரு சக்கர வாகன விபத்து ஏற்படுகிறது. மேலும் பாலம் வேலையை மீண்டும் தொடங்க பல்வேறு அதிகாரியிடம் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை மேலும் அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பயன் இல்லை. எனவே பாலம் வேலையை தொடங்கி உடனடியாக முடிக்க உத்திர விட வேண்டும் என மனுவில் கூறியருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் பாலம் கட்டும் பணி ஏறத்தாழ முடிவடைந்துள்ளது. சாலை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது” என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பணிகள் தொடர்பான தற்போதைய நிலை அறிக்கையை மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Views: - 5

0

0