வேளாண் பல்கலை.,க்கு வாசனைப்பயிர்களின் மேம்பாட்டிற்காக தலைச்சிறந்த விருது

Author: Udhayakumar Raman
1 July 2021, 10:33 pm
Quick Share

கோவை: கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு வாசனைப்பயிர்களின் மேம்பாட்டிற்காக தலைச்சிறந்த செயல்பாட்டு மைய விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், இந்திய அரசின் ஒருங்கிணைந்த தோட்டக்கலைப்பயிர்களின் மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் வாசனைப் பயிர்களின் விதை, நடவு பொருள் உற்பத்தி மற்றும் வாசனைப் பயிர்களின் தொழில் நுட்பத்தை பிரபலப்படுத்துதல்
என்கிற திட்டமானது வாசனை மற்றும் மலைத்தோட்டபயிர்கள் துறை, தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளத்தினை தலைமைமையமாகக் கொண்டு செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக 2019-20 –ம் ஆண்டு ரூ.78.51 லட்சமும், 2020-21 –ம் ஆண்டிற்கு ரூ.88.87 லட்சமும் கேரளாவில் கோழிக்கோட்டில் உள்ள பாக்கு மற்றும் வாசனை பயிர்கள் மேம்பாட்டு இயக்ககம் நிதியாக ஒதுக்கியுள்ளது.

இத்திட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் கல்லூரிகள் உட்பட 16 துணை மையங்களாக பெரியகுளம், கோயம்புத்தூர், பவானிசாகர், ஊட்டி, ஏற்காடு, பாலுர், திருச்சி, கிள்ளிக்குளம், கொடைக்கானல், தடியன்குடிசை, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி மற்றும் தோவாளை ஆகியவை வாசனை மற்றும் நறுமணப் பயிர்களில் வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த 16 மையங்களிலும் கருமிளகு, இஞ்சி, பூண்டு , மிளகாய் , கொத்தமல்லி, ஜாதிக்காய், கிராம்பு, இலவங்கப் பட்டை, சர்வசுகந்தி, புளி, கறிவேப்பிலை மற்றும் நறுமண பயிர்களின் விதை மற்றும் தரமான நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

வயல்வெளி முன்னோடி திட்டத்தின் கீழ் நறுமண பயிர்களாகிய மஞ்சள், கருமிளகு, கொத்தமல்லி, மற்றும் மிளகாய் ஆகியவற்றில் அங்ககவேளாண் சாகுபடி திடல்கள் அமைக்கப்பட்டன. தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு, தடியன்குடிசை மற்றும் பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் வாசணைப் பயிர்களின் நாற்றங்கால் மேம்படுத்தப்பட்டு கோழிக்கோட்டில் உள்ள பாக்கு மற்றும் வாசனைபயிர்கள் மேம்பாட்டு இயக்ககத்தின் மூலம் தரச்சான்றிதல் வழங்கப்பட்டுள்ளது. வாசனைப்பயிர்களின் முக்கியத்தவம் பற்றி பிரபலப்படுத்தவும் மற்றும் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கவும் பல்வேறு துணை மையங்களில் விவசாயிகளுக்கு தொழில்நுட்பபயிற்சி அளிக்கப்பட்டது. வாசனைப் பயிர்கள் குறித்த கருத்தரங்கும் நடத்தப்பட்டன.

இத்திட்டத்தின் வருடாந்திர மறு ஆய்வு கூட்டம் 2021 ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் காணொளிகாட்சியின் மூலமாக நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய அளவிலிருந்து பங்கேற்ற 45 மையங்களில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 2020-21 ம் ஆண்டில் தலைச்சிறந்த செயல்பாட்டு மையமாக அறிவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 161

0

0