ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர்த்தப்பட்ட விவகாரம் விரும்பத்தகாத செயல்: உணவுத்துறை அமைச்சர் பேட்டி

Author: Udayaraman
11 October 2020, 7:55 pm
Quick Share

திருவாரூர்: சிதம்பரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர்த்தப்பட்ட விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாக திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நீர்நிலை புறம்போக்கில் உள்ள மீள்குடியேற்ற பயனாளிகளுக்கு குடியிருப்பு வீடுகள் மற்றும் பட்டா வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் 152 பயனாளிகளுக்கு குடியிருப்பு வீடுகள் மற்றும் வீட்டுமனைப் பட்டாக்களை தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ் கூறியதாவது:- அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கிய இந்த ஆண்டுக்கான காரிப் பருவத்தில் இதுவரை 73.245 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்கள் என 858 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 239 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 267 நெல் கொள்முதல் நிலையங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 149 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தேவைப்படும் இடங்களில் விவசாயிகள் கேட்கும் பட்சத்தில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். சிதம்பரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தரையில் அமர்த்தப்பட்ட விவகாரம் விரும்பத்தகாத செயல். இதுபோன்ற விவகாரங்களில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. சம்பா சாகுபடிக்கு தேவையான உரம் இடுபொருட்கள் அனைத்தும் கையிருப்பில் உள்ளது. அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம் பெறாதது தனக்கு மகிழ்ச்சி என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் மிக மூத்த நிர்வாகி அவர் எந்தக் கருத்து கூறியிருந்தாலும் அவர் உளப்பூர்வமாகவே கூறியிருப்பார் என்றார்.

Views: - 33

0

0