பொதுமக்கள் குறைகளை கேட்பதற்காக அலுவலகத்தை திறந்த பாரிவேந்தர்
7 February 2021, 5:57 pmதிருச்சி: முசிறியில் பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் பொதுமக்கள் குறைகளை கேட்பதற்காக அலுவலகத்தை திறந்தார்.
திருச்சி மாவட்டம், முசிறியில் ஐஜேகே கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் முசிறியில் பொதுமக்களின் குறைகளை கேட்பதற்கான அலுவலகத்தை திறந்து வைத்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பெரம்பலூர் தொகுதி எம்பி பாரிவேந்தர் அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:- தேர்தல் வாக்குறுதியின்படி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளிலும் பொதுமக்களின் குறைகளை கேட்பதற்காக இந்த அலுவலகத்தை திறந்துள்ளேன். மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து இங்கு மனுக்கள் அளிக்கலாம். அலுவலகத்தில் இருக்கும் எனது உதவியாளர் மனுக்களை பெற்று அதன் விவரங்களை எனக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவார். அதன்அடிப்படையில் பொது மக்களின் கோரிக்கைகள் தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய நிலங்கள் பயன்பெறும் தொகுதி வளம் பெறும் என பாரதப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தேன். அதனை தொடர்ந்து டெல்லி அலுவலகத்தில் திட்ட செயலாக்கம் குறித்து என்னிடம் விளக்கம் கேட்டார்கள். அந்த விளக்கத்தையும் கூறினேன்.காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தின் பயன்கள் குறித்து தமிழக முதல்வரிடம் வலியுறுத்தினேன். அதன் விளைவாக காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் துவங்கியுள்ளது.மேலும் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் ரயில்வே பாதை அமைப்பதற்கு தொடர்ந்து ரயில்வே துறை மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தி வருகிறேன்.
இதுவரை பெரம்பலூர் தொகுதியில் பதவி வகித்த எம்பிகள் செய்யாத சாதனை திட்டங்களை இத்தொகுதி மக்களுக்காக கண்டிப்பாக நிறைவேற்றி தருவேன். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகங்கள் வாயிலாக வருடத்திற்கு 300 மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி அளிக்கும் பணி நான் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 300 மாணவர்களும், இந்த வருடம் 300 மாணவர்கள்களும் இலவசமாக படித்து வருகின்றனர். உங்களின் குறைகளை கோரிக்கைகளை கூறுவதற்கு திறக்கப்பட்டுள்ள இந்த அலுவலகங்களை பயன்படுத்தி பயன்பெறுமாறு பாரிவேந்தர் கேட்டுக்கொண்டார். மேலும் எம்பி பாரிவேந்தரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
0
0