நல்லூர் வயல் தான் எங்கள் கிராமத்தின் பெயர்..! காருண்யா நகர் வேண்டாம் : போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

3 February 2021, 8:41 pm
Quick Share

கோவை: கோவை சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா நகர் பெயரை மீண்டும் நல்லூர் வயல் என மாற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட நல்லூர் வயல் குழுவினர் உட்பட சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் காருண்யா பல்கலைகழகம் அருகேயுள்ள பகுதி காருண்யா நகர் என்று அழைக்கப்படுகிறது. முன்னதாக அந்த பகுதி, நல்லூர் வயல் என இருந்ததாகவும், அரசு கெசட்டிலும் நல்லூர் வயல் என உள்ள நிலையில் காருண்யா நகர் என மாற்றப்பட்ட கிராமத்தின் பெயரை மீண்டும் நல்லூர் வயல் என மாற்றக்கோரி நல்லூர் வயல் மீட்புக்குழுவினர் சிறுவாணி சாலை ஆலாந்துறையில் கவன ஈர்ப்பு பேரணிச் சென்றனர்.

பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்ததால், ஆலாந்துறை சிறுவாணி சாலையில் சுமார் 350 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து பேரணி சென்றவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். இதனால் அங்கு லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பேரணி சென்ற சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு கெசட்டில் உள்ளது போல மீண்டும் நல்லூர் வயல் பெயரையே வைக்க வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர். தடையை மீறி பேரணி செல்ல முயன்றவர்களை போலிசார் கைது செய்தனர்.

Views: - 2

0

0