குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போராட்டம்!

18 August 2020, 6:14 pm
Quick Share

திருப்பத்தூர்: கதிரமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 7 மாதமாக அத்தியாவசிய தேவையான குடிநீர் வரவில்லை என்பதற்காக திருப்பத்தூரில் இருந்து புதுப்பேட்டை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூரிலிருந்து புதுப்பேட்டை செல்லும் வழியில் கதிரமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சி கே ஆசிரமம் அருகில் காந்திபுரம் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு கடந்த 7 மாதங்களாக அத்தியாவசிய தேவையான குடிநீர் கிடைக்கவில்லை என்கிற அதிருப்தியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் இது சம்பந்தமாக கிளார்க் வெங்கடாஜலபதி இடம் பலமுறை முறையிட்டும் அதற்கு அவர் நீங்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளீர்கள். எனவே அவரையே தண்ணீரை விட சொல்லுங்கள் என்று பொறுப்பில்லாமல் பதில் சொல்கிறார். அதுமட்டுமில்லாமல் ஆப்பரேட்டர் ஆறுமுகம் ஆழ்துளை கிணறு அருகே குழாயை வைத்து பணம் வாங்கிக்கொண்டு குடிநீர் வினியோகம் செய்கிறார். அதே தண்ணீரை எங்கள் பகுதிக்குள் உள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றிவிட சொன்னால் முடியாது என்கிறார்.

எனவே எங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக சாலை மறியலில் ஈடுபடுகின்றோம் என்று கூறினர். தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல் ஆய்வாளர் ராணி மற்றும் திட்ட இயக்குனர் மகேஷ் பாபு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களுடைய பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைக்கிறோம் என்று உத்தரவாதம் அளித்ததன் பெயரில் மக்கள் கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வியாபாரிகள், மருத்துவப் பணிக்கு செல்பவர்கள் கூட சாலையை கடக்க முடியாமல் அவதிப்பட்டது குறிப்பிடத்தக்கது.