மேய்ச்சலுக்கு வரும் மாடுகள் குளத்தில் தண்ணீர் அருந்த அனுமதி: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

18 September 2020, 5:43 pm
HC Madurai 01 updatenews360
Quick Share

மதுரை: தமிழக அரசு இனி வரும் காலங்களில் கண்மாய், குளங்களில் மீன் வளர்க்க ஏலம் விடும் போது, மேய்ச்சலுக்கு வரும் மாடுகள் குளத்தில் தண்ணீர் அருந்த அனுமதி வழங்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொணர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்தை பதிவு செய்து உத்தரவிட்டுள்ளது.

போடியை சேர்ந்த மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,” போடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள மீனாட்சிஅம்மன் கண்மாய் மற்றும் குளத்தில் மீன், பாசி உள்ளிட்டவற்றை ஏலம் விடுவது தொடர்பாக வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை முடித்துவைத்த நீதிபதி, உத்தரவில் தற்போது குளங்கள், கண்மாய், ஏரிகள் போன்றவற்றை பொதுப்பணித்துறை, வருவாய்துறையினர் தனி நபர்களுக்கு மீன் வளர்க்க ஏலம் விடுகின்றனர். அவ்வாறு ஏலம் எடுத்தவர்கள்,

ஏலம் எடுத்த குளத்தில், நீண்ட தொலைவில் இருந்து மேய்ச்சலுக்கு வரும் மாடுகளையும், கிடைமாடுகளையும் தாகத்திற்கு நீர் அருந்த கூட அனுமதிப்பதில்லை. பறவைகளைக் கூட வெடி வைத்து விரட்டுகின்றனர். கால்நடைகளை நீர் அருந்த அனுமதிக்காததால், தாகத்துடன் பல மைல்தூரம் செல்ல வேண்டிய அவலநிலை. உள்ளது” இதனை சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் தனது நூலில் பதிவு செய்துள்ளார். இது மிகவும் வேதனையான நிகழ்வு.

ஆகவே, தமிழக அரசு இனி வரும் காலங்களில் கண்மாய், குளங்களை மீன் வளர்க்க ஏலம் விடும் போது, மேய்ச்சலுக்கு வரும் மாடுகள் குளத்தில் தண்ணீர் அருந்த அனுமதி வழங்க விதிமுறைகளை நிபந்தனைகளை மாற்றியமைக்க வேண்டும். குளம், கண்மாய்களை ஏலம் எடுத்துவர்கள் இந்த மண்ணில் தொன்றுதொட்டுநிலவும் கிராம மக்களின் பழக்கவழக்கங்களை மதிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Views: - 7

0

0