புகார் கொடுத்தவரையே கைது செய்த போலீசார்..!!! உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல்

Author: Udhayakumar Raman
13 September 2021, 7:57 pm
Quick Share

கரூர்: கரூர் அருகே புகார் கொடுத்தவரையே விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார்இ நீண்ட நேரத்திற்கு பின்னர் அவரையே கைது செய்ததாக கூறிய சம்பவத்தினால் அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

கரூர் அடுத்த தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் வசிப்பவர் பாலுச்சாமி. இவரது வீடுக்கு அருகிலேயே 4 செண்ட் காலி இடம் வைத்துள்ளார். அந்த இடத்தை அதே பகுதியை சார்ந்த ஒரு குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக அந்த காலிநிலத்தினை நில அளவையர் மூலம் அளந்து கற்கள் ஊன்றப்பட்டுள்ளது. அப்போது எதிர் தரப்பினர் பாலுச்சாமி மற்றும் அவரது மகன் திருநாவுக்கரசு ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக கடந்த 7 ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக விசாரித்த தாந்தோன்றிமலை போலீசார் 15 நாட்கள் கழித்து பேசிக் கொள்ளலாம் என சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் எதிர் தரப்பினர் பாலுசாமி மற்றும் அவரது மகன் திருநாவுக்கரசு ஆகியோர் தங்களை தாக்கியதாக கூறி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து விட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருநாவுக்கரசை தாந்தோன்றிமலை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாக கூறப்பட்ட நிலையில்,

இதனை அறிந்த திருநாவுக்கரசின் உறவினர்கள், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பொதுமக்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் தாந்தோன்றிமலை காவல் நிலையம் அருகில் கரூர் – திண்டுக்கல் சாலையில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து தாந்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 181

0

0