விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்தபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தம்…

22 August 2020, 3:07 pm
Quick Share

சேலம்: சேலத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்தபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு.

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உயர்நீதிமன்ற உத்தரவின்படி சதுர்த்தி விழா மிக எளிமையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியை பொருத்தவரை சேலத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் குறிப்பாக சேலம் இருபாலர் அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள அருள்மிகு எல்லைப்பிடாரியம்மன் கோவில் வளாகம் உட்பட மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால் நடப்பாண்டு இந்தக் கொரோனா உயிர்க்கொல்லி நோய் தொற்றின் காரணமாக தமிழக அரசும் சென்னை உயர் நீதிமன்றமும் சிலபல கட்டுப்பாடுகளுடன் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி அளித்தது. அந்த வகையில் எப்பொழுதும் பிரதிஷ்டை செய்யப்படும் எல்லைப்பிடாரி அம்மன் கோவிலுக்கு இன்று வந்த இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த முயன்றனர். இதற்கு சேலம் அஸ்தம்பட்டி காவல்துறையினர் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தக்கூடாது என்று தமிழக அரசும் உயர்நீதிமன்றமும் கூறியதை சுட்டிக்காட்டி இந்துமுன்னணி அமைப்பினரின் வழிபாட்டை தடுத்து நிறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி அமைப்பின் சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ் குமார் அங்கிருந்து ஊர்வலமாக விநாயகர் சிலையை எடுத்துச் சென்றபோது அவரது ஆதரவாளர்கள் விநாயகரைப் போற்றி பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஏற்காடு பிரதான சாலையில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவரின் கடையில் வைத்து சிறப்பு பூஜைகளை செய்தனர் இந்து முன்னணியினர். அப்பொழுதும் காவல்துறை அதிகாரிகள் உட்பட நீதித் துறையை சேர்ந்தவர்களும் இந்த வழிபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து காவல்துறையினர் மற்றும் நீதி துறையினர் கலைந்து சென்றதையடுத்து விநாயகப்பெருமானுக்கு சம்பந்தப்பட்ட கடையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது அங்கு திரண்டிருந்த இந்து முன்னணி அமைப்பை சார்ந்தவர்கள் விநாயகரை துதித்து பல்வேறு பாடல்களைப் பாடியது சேலம் ஏற்காடு பிரதான சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 0

0

0