பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேச விட்டால் மின் இணைப்பு துண்டிப்பு போராட்டம்: போராட்ட குழுவினர் அறிவிப்பு

4 November 2020, 2:55 pm
Quick Share

திருச்சி: மின் வாரிய தலைவர் தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச வேண்டும் இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம் என போராட்ட குழுவினர் அறிவித்துள்ளனர்.

திருச்சி மன்னார்புரம் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொழிலாளா முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மலையாண்டி தலைமையில் மின் வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்ட உரையை சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்ராஜன் வழங்கினார். இந்த போராட்டத்தில் பொறியாளர் கழகத்தின் மண்டல செயலாளர் விக்ரமன், நிர்வாகி, சந்தானகிருஷ்ணன், இன்ஜினியர் சங்க நிர்வாகி சங்கர்கணேஷ், பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் ராஜமாணிக்கம் நிர்வாகி சிவசொல்ல உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மின் திட்டங்களில் பணியாற்றி வரும் ஊழியர், பொறியாளர் அலுவலர்களின் பதவிகளை தொடர்ந்திட வேண்டும், துணை மின் நிலையங்களை பராமரிக்கும் பணிகளை தனியாரிடம், ஒப்படைக்க கூடாது, பதவி உயர்வுகளையும், புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்கிட வேண்டும், மின் ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள் பகுதிநேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர் அனைவருக்கும் போனஸ் வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் செய்தியாளர்களை சந்தித்த போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் ரங்கராஜன் பேசுகையில், மின்வாரிய தலைவர் உடனடியாக தொழிற்சங்கத்தினரை அழைத்து பேசி அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும், இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம் என தெரிவித்தார்.

Views: - 13

0

0