விவசாயி மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்த பவர் டில்லர் உரிமையாளர் கைது

By: Udayaraman
12 October 2020, 7:11 pm
Quick Share

செங்கல்பட்டு: விவசாயி மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்த பவர் டில்லர் உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட கொண்டமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்ற விவசாயி கடந்த இரண்டு வருடம் முன்பு தன்னுடைய நிலத்தில் விளைந்த நெல்லை அறுவடை செய்ய அதே கிராமத்தை சேர்ந்த பவர் டில்லர் உரிமையாளரான பெருமாள் என்பவரை அணுகினார். நெல் அறுவடை செய்த பின்னர் பெருமாளுக்கு அளிக்க வேண்டிய பணத்தில் 3500 ரூபாய் மட்டும் பாக்கி வைத்து விட்டு மீதி பணத்தை ராஜகோபால் அளித்துள்ளார். கடந்த இரண்டு வருடமாக ராஜகோபாலிடம் பாக்கி பணத்தை கேட்டு பெருமாள் நச்சரித்து வந்துள்ளார்.

இதற்கிடையே ராஜகோபால் பவர் டில்லர் ஒன்று வாங்கி தன்னுடைய விவசாயத்துக்கு பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை ராஜகோபாலின் வீட்டுக்கு டிராக்டர்வுடன் வந்த பெருமாள் ராஜகோபால் வைத்துள்ள பவர்டில்லர் மிஷினை கைப்பற்றி தன்னுடைய டிராக்டரில் கட்டி இழுத்து சென்றார். இதனைக்கண்ட ராஜகோபால் டிராக்டர் முன்பு நின்று என்னுடைய பவர் டில்லர் மிஷினை விட்டுவிடுங்கள், ,உங்களுடைய பணத்தை அளிக்கின்றேன் ,சற்று காலதாமதமாகும் பொறுத்துக் கொள்ளுங்கள் என கெஞ்சியுள்ளார். அதை சற்றும் பொருட்படுத்தாத பெருமாள் ஆவேசத்துடன் ராஜகோபால் மீது டிராக்டரை ஏற்றி உள்ளார்.

இதில் படுகாயமடைந்த ராஜகோபாலை அப்பகுதி மக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராஜகோபால் உயிரிழந்தார். சம்பவத்தை கேள்விப்பட்ட மறைமலைநகர் காவல்துறையினர் பெருமாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள் .விவசாயி ஒருவரை பணத்துக்காக டிராக்டரை ஏற்றி கொலை செய்த செயல் அப்பகுதி மக்களிடையேயும் விவசாயிகளிடையேயும் மிகுந்த அச்சத்தையும் கலக்கத்தையும் உண்டாகியுள்ளது.

Views: - 40

0

0