தனியார் நிறுவன காவலாளி அடித்துக் கொலை : சிசிடிவி காட்சிகள் மூலம் 4 பேர் கைது!!!

Author: Udayaraman
26 July 2021, 4:14 pm
Murder 4 Arrest 1 - Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : பாபநாசம் அருகே தனியார் நிறுவன காவலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலங்கி 4 கொலையாளிகளை தனிப்படை போலீசார் வளைத்துப் பிடித்தனர்.

தஞ்சையில் நாகை சாலையில் உள்ள விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 74). இவர் பாபநாசம் தாலுகா தளவாய்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பிளாஸ்டிக் பைப் கம்பெனியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு ஜெயபால் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இந்த நிலையில் மறுநாள் காலையில் பிளாஸ்டிக் பைப்பு கம்பெனியில் உரிமையாளரின் சகோதரர் தர்மராஜ் அங்கு வந்தார்.

அப்போது ஜெயபால் தலையில் படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கம்பெனி வாசலில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பெயரில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்து, இன்ஸ்பெக்டர் பேபி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் ஜெயபால் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது நள்ளிரவில் மர்ம நபர்கள் பிளாஸ்டிக் கம்பெனியில் குடித்துவிட்டு செல்வதற்காக அங்கு வந்துள்ளனர்.

அதனை இரவு நேர காவலாளியான ஜெயபால் இங்கு குடிக்கக்கூடாது என்று தடுத்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் பெரிய கருங்கல்லால் ஜெயபாலை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அவரிடம் இருந்த அவரது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரிய வந்ததுள்ளது.

சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் ரவிச்சந்திரன், கைரேகை நிபுணர் கீதா ஆகியோர் ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் குற்றப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், கண்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைபோலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

பின்னர் கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலங்கிய போது கொலையாளிகள் அங்கு நடமாடிய தெரியவந்தது. அதன்பிறகு தனிப்படையினர் இந்த கொலையில் ஈடுபட்ட தஞ்சாவூர் வாளமர்கோட்டை செந்தில் குமார் (வயது 37), தஞ்சாவூர் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த குமார் (வயது 50), வலங்கைமான் தாலுகா நார்த்தங்குடி
மொட்டை குமார் என்கின்ற விஜயகுமார் (வயது 39), தஞ்சாவூர் கரைமீண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்கின்ற ஜெகதீசன் (வயது 34) ஆகிய 4 கொலையாளிகளையும் தஞ்சை மாரியம்மன் கோவில் அருகே கைது செய்து அம்மாபேட்டை போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் கொலை வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மாஜிஸ்ட்ரேட் 4 பேர்களையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் நான்கு பேரையும் பாபநாசம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Views: - 193

0

0