15 தினங்களாக திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையம்… முளைவிட்ட நெல் மூட்டைகள்…

9 July 2021, 3:31 pm
Quick Share

திருவாரூர்: மன்னார்குடி அருகே 54 நெம்மேலி கிராமத்தில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் கொட்டிவைக்கப்பட்ட நெல் முளைக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது குறுவை நடவு பணிகளுக்காக விவசாயிகள் நிலங்களை தயார் படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் ஆழ்துளை கிணறு மூலம் விவசாயம் செய்து வந்த விவசாயிகள் கோடை குறுவை பயிரிட்டு இருந்தனர். குறிப்பாக மன்னார்குடி, கோட்டூர், சேரங்குலம்,54-நெம்மேலி,உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கோடை குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

54- நெம்மேலி கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொடைகுறுவை பயிரிடப்பட்ட து. விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இங்கு அமைந்துள்ள போதும்,கடந்த 15 நாட்களுக்கு மேலாக இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டம் நடத்த இருந்த நிலையில் அரசு அதிகாரிகள் சாமதான பேச்சுவார்த்தை நடத்தி கொள்முதல் நிலையங்களை திறப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு அடைமழை பெய்து வருகிறது.

கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் அறுவடை செய்த நெல்லை பாதுக்க முடியவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். கொட்டி வைக்கப்பட்ட நெல்லும் தற்போது பெய்த மழையில் நனைந்து முளைவிட்டு முளைக்க தொடங்கியதால் அறுவடை செய்த நெல்லை விற்றாலும் பயனில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.இன்று மதியத்திற்குள் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யவில்லை எனில் தாங்கள் அறுவடை செய்த நெல்லை நடுரோட்டில் கொட்டி மறியல் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 100

0

0