மதுபான கடையை திறக்க குடிமகன்கள் போராட்டம்… மற்றொரு புறம் கடையை இழுத்து மூட பெண்கள் போராட்டம்

4 September 2020, 6:24 pm
Quick Share

நாகப்பட்டினம்: நாகை அருகே குடிமகன்கள் அரசு மதுபான கடையை திறக்க வேண்டும் என்றும், குடும்ப பெண்கள் கடையை இழுத்து மூட வேண்டும் என்று போட்டி போராட்டம் நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகை மாவட்டம் விழுந்தமாவடி பேருந்து நிறுத்தம் எதிரே அரசு மதுபான கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடை அருகே கோவில் மற்றும் மளிகை கடை அமைந்துள்ளதால், அரசு மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும் என விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், ஆத்திரமடைந்த விழுந்தமாவடி கிராம மக்கள் இன்று மதுபான கடையை திறக்க விடாமல் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையறிந்த குடிமகன்கள் இன்று மதுபான கடை முன் திரண்டனர்.

பின்னர் கடை திறக்காததால் ஆத்திரமடைந்த மதுப் பிரியர்கள் மதுக்கடையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் கடையை இங்கிருந்து மாற்றக் கூடாது என்றும் தொலைதூர உள்ள கடைக்கு சென்றால் தங்களுக்கு பெரும் சிரமம் இருப்பதாக அவர்கள் கொதித்தெழுந்தனர். அரசு மதுபானக்கடை இல்லை என்றால் காரைக்காலில் இருந்து வரும் கள்ளச்சாராயத்தை தாங்கள் குடித்து உயிரிழக்கும் வேண்டியதுதான் என அலப்பறையும் செய்தனர். இதையடுத்து அங்கு வந்த வேளாங்கண்ணி இன்ஸ்பெக்டர் அரசு மதுபான கடை முன் நின்று கொண்டு கூச்சல் குழப்பம் செய்யக்கூடாது என குடிமகன்களை அங்கிருந்து மிரட்டி, விரட்டி அடித்தார்.

இதையடுத்து போலீசாரை பார்த்ததும் காலையிலேயே மது அருந்த வந்த மது பிரியர்கள் போலீசாருக்கு பயந்து கொண்டு அங்கிருந்து பொடிநடையாக சைக்கிளை எடுத்துக்கொண்டு நடையை கட்டினர். அரசு மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்த நிலையில் அதே கடையை திறக்காத ஆத்திரத்தில் குடி’மகன்கள் போலீசாரிடம் அலப்பறை செய்த சம்பவம் நாகைமாவட்டம் விழுந்தமாவடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே விழுந்தமாவடி கிராமத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு கடையை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தற்போது அந்த பகுதியில் குடிமகன்கள் கடையை திறக்க வேண்டும் என்றும், குடும்ப பெண்கள் கடையை இழுத்து மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால், டி எஸ் பி தலைமையிலான 50 திற்கும் மேற்பட்ட போலீசார் மதுபானக்கடை. முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 0

0

0