தாமிரபரணி ஆற்றில் குளிக்க தடை: மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு

Author: Udhayakumar Raman
17 October 2021, 1:57 pm
Quick Share

நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட அதிக நீர் திறந்துவிடப்படுவதாகவும், ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவும் தடை விதித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் அதிக மழைப்பொழிவின் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றிரவு நிலவரத்தின் படி மொத்த அளவான 143 அடியில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 125. 4 அடியினையும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் மொத்த அளவான 156 அடியில் 149.11 அடியினையும் எட்டியுள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விநாடிக்கு 1500 கன அடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆற்றில் உபரி நீர் திறந்துவிடப்படுவதற்கும் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் வரவும் வாய்ப்புள்ளது,

எனவே தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு பிறப்பித்துள்ளார். மழை இடர்பாடுகள் தொடர்பாக பொதுமக்கள் தகவல் அளித்திட 24 மணி நேரமும் இயங்கி வரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறையினை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0462 – 250 1070 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Views: - 124

0

0