மின் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கும் மின் துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

1 November 2020, 5:41 pm
Quick Share

புதுச்சேரி: கொரோனா காலத்தில் கட்டப்படாத மின் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கும் மின் துறையை கண்டித்து புதுச்சேரி – கடலூர் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் மார்ச் மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை ஒட்டி பல்வேறு அரசுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் செயல்படாமல் இருந்தது. தொடர்ந்து பல்வேறு அரசு நிறுவனங்கள் செயல்பட தொடங்கிய பின்பு மின் துறை நிறுவனங்கள் சார்பில் மின்நுகர்வோர் கட்டணம் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டது. இதில் மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான மின்கட்டணம் பொதுமக்களுக்கு வழங்கியதில் மாதந்தோறும் சராசரியாக கட்ட வேண்டிய மின் கட்டணத்தில் இருந்து ஐந்து மடங்கு மின் கட்டண உயர்வு அவர்களிடம் வழங்கப்பட்டது.

இதற்கு பல்வேறு கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து அரசுத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் இதுகுறித்து மின்துறை எந்தவித நடவடிக்கை எடுக்காததால் புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த கலாம் சேவை மையம் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரையிலான மின் கட்டணத்தை தனித்தனி கட்டணத் தொகையாக தர வேண்டும், நிலுவைத் தொகையை 12மாத தனியாக பிரித்து செலுத்தும் வசதியை செய்து தர வேண்டும், நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் 2 சதவீத வட்டியை விதிக்கக் கூடாது என வலியுறுத்தி புதுச்சேரி இருந்து கடலூர் செல்லும் சாலையில் உள்ள மரப்பாலம் மின் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் வட்டாட்சியர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து சாலை மறியலில் இருந்து கலைந்து சென்றனர்.

Views: - 16

0

0