புதுச்சேரி அரசு சார்பில் திரைப்பட விழா: சிறந்த தமிழ் திரைப்படமாக ‘தேன்’ தேர்வு

Author: Udhayakumar Raman
25 September 2021, 4:27 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் 5 நாட்கள் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் திரைப்படமாக ‘தேன்’ தேர்வு செய்யப்பட்டு அதன் இயக்குனர் கணேஷ் விநாயகத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதுடன் ரூபாய் ஒரு லட்சம் வழங்கப்பட்டது.

புதுச்சேரி அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இத்திரைப்பட விழா இந்தியாவிலேயே புதுச்சேரியில் மட்டும் தான் 38 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் நடப்பாண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா-2021,  இன்று தொடங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இத்திரைப்பட விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, வங்க மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. அலையன்ஸ் பிரான்சேஸ் கலை அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், அலையன்ஸ் பிரான்சேஸ் தலைவர் சதீஷ் நல்லாம் நவதர்ஷன் திரைப்படக்கழகம் செயலர் பழனி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்.

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை செயலர் உதயகுமார் கடந்த 2020-ல்  சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ‘தேன்’ படத்தின் இயக்குநர் கணேஷ் விநாயகனுக்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் படத்தின் நடிகர் தருண், தயாரிப்பாளர் அம்பலவாணன், ஒளிப்பதிவாளர் சுகுமார் உள்ளிட்டோரும் கவுரவிக்கப்பட்டனர். விழாவுக்கு பின்னர்  ‘தேன்’ திரைப்படம் இலவசமாக திரையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து வரும் 28-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், இதே அரங்கில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு இதர மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட்டவுள்ளன..

Views: - 168

0

0