ராகுல் வருகை கொரோனா தடுப்பு நடவடிக்கையை சீர்குலைக்கும் செயல்: அர்ஜுன் சம்பத் பேட்டி

22 January 2021, 11:32 pm
Quick Share

திருப்பூர்: வெளிநாடு சென்று விட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தமிழ்நாட்டுக்கு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செயல் மத்திய மாநில அரசுகளின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை சீர்குலைக்கும் செயல் என தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழியாக மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்ற இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தாராபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் அவர்கள் கடந்த 10 நாட்களில் தமிழ்நாட்டுக்கு இரண்டாவது முறையாக வருகிறார். கடந்தமுறை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு வந்தவர். தமிழ்நாட்டினுடைய கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டிய நிலையில் நான் உள்ளேன் என்றார்.

அவர் எப்படி தமிழகம் வந்தார் என்றால் வெளிநாடு சென்று விட்டு டெல்லி வந்தவர். ஒரு நாள் கூட டெல்லியில் தங்காமல் நேரடியாக தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டார். ஜல்லிக்கட்டை தடை செய்தது திமுக , காங்கிரஸ் கூட்டணி தான் அதே ஜல்லிக்கட்டில் அவர் கலந்துகொண்டு பங்கேற்பது வினோதமான ஒரு நிகழ்வு அது கண்டிக்கத்தக்கது தான். இதில் முக்கியமான விஷயம் பாரத நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் கொரானாவை தடுக்க பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

ஏனென்றால் இரண்டாவது அணை வரும் எனக் கூறுகிறார்கள். பல நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடு சென்றுவரும் ஒரு தலைவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு தனக்கு கொரோனா தொற்று இல்லை என ஒரு பொறுப்பான தலைவராக இருந்தால் அதை செய்து இருப்பார். கொஞ்சம் கூட பொறுப்பற்ற முறையில் ராகுல் நடந்திருக்கிறார். மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் ஒரு தடுப்பு நடவடிக்கைகளுக்கு அவதூறு பரப்பும் வகையில் உள்நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனவே ராகுல் உடைய இந்த நடவடிக்கைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தடுப்பு நடவடிக்கையில் அரசு முழுவீச்சில் ஈடுபட்டு கொண்டிருக்கையில் அதனை பொதுமக்களுக்கு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் ராகுல் காந்தியின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அவரின் சிறுபிள்ளைத்தனமான இந்த செயலுக்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கக் கூடாது. அவரது வருகையை தடை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தொடர்ந்து திமுக தலைவர் மறைந்த கருணாநிதி அவர்கள் இந்துக்களின் செயல்களை விமர்சனம் செய்தவர். அது பற்றிய கேள்வியை எழுப்புவது நகைச்சுவையானது. ஸ்டாலின் இந்துக்களுக்காக போராடுபவர் ஆக இருந்தால் கருணாநிதி இந்துக்கள் எல்லாம் அவர்கள் என்று சொன்னாரே அதற்காக ஸ்டாலின் மன்னிப்பு கேட்பாரா. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 0

0

0