தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை அகற்றம்
Author: kavin kumar11 August 2021, 6:58 pm
திண்டுக்கல்: திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டதை, நெடுஞ்சாலை துறையினர் அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல்லில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமர்ந்த நிலையில் 500 கிலோ எடையுள்ள திருவள்ளுவரின் திரு உருவ வெண்கல சிலையானது திண்டுக்கல்லில் நிறுவுவதற்கு தயார் செய்யப்பட்டது. அதனை நிறுவ முடியாமல் மேட்டுப்பட்டியில் உள்ள பாவேந்தர் கல்விச்சோலை தொடக்கப் பள்ளியிலேயே பாதுகாக்கப்பட்டு திருவள்ளுவர் தினத்தில் மட்டும் அவருக்கு பொங்கல் படைத்து பூஜை நடத்தி வந்தனர். இந் நிலையில் திண்டுக்கல் பேகம்பூர் அருகே உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பாக பீடம் அமைத்து திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது.
இதனையறிந்த நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய் துறையினர் சிலையை அகற்றுவதற்கு காவல்துறை துணையுடன் வந்தனர். தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகள் சிலையை அகற்றக்கூடாது என சிலைக்கு முன்பாக அமர்ந்தனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தையால் சமாதானப்படுத்தி, கிரேன் மூலம் சிலையை அகற்றி பள்ளி வளாகத்தில் வைத்தனர். திருவள்ளுவர் சிலை வைத்து பின்னர் அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
0
0