அனைத்து சுற்றுலா தலங்கள் திறக்க புகைப்படம் எடுக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை

Author: Udayaraman
4 October 2020, 7:54 pm
Quick Share

நீலகிரி: அனைத்து சுற்றுலா தலங்கள் திறந்தால் மட்டுமே தங்களின் வாழ்வாதாரம் மேம்படும் என சுற்றுலாத்தலங்களில் புகைப்படம் எடுக்கும் தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் முதல் கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக இருந்து வந்த பொது முடக்கத்தால் அனைத்து சுற்றுலா தலங்களும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மூடப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற நீலகிரி மாவட்டமானது பல சுற்றுலாத் தலங்களை கொண்டதாகும் ஆண்டுதோறும் இம்மாவட்டத்திற்கு சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்குள்ள உதகை அரசு தாவரவியல் பூங்கா , ரோஜா பூங்கா , படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், பைக்காரா படகு இல்லம், உள்ளிட்ட மேலும் பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக கொரோனா பொது முடக்கத்தால் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கக்கூடாது என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தோட்டக்கலைத் துறையின் கீழ் இயங்கும் பூங்காக்கள் அனைத்தும் திறந்து கொள்ளலாம் என அரசு ஆணை பிறப்பித்தது. இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா , குன்னூர் சிம்ஸ் பூங்கா, மற்றும் காட்டேரி பூங்கா, போன்ற பூங்காக்கள் திறக்கப்பட்டன. தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு இம்மாவட்டத்திற்கு வர தனி பாஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில் பூங்காக்களில் தற்போது கணிசமான சுற்றுலா பயணிகளின் வருகையால் ஆண்டுதோறும் பூங்காக்களில் புகைப்படம் எடுக்கும் தொழிலாளர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

எனவே நீலகிரி மாவட்டத்தில் தற்போது பூங்காக்கள் மற்றும் திறக்கப்பட்டுள்ளதால் வருமானம் இல்லாமல் உள்ளதாகவும், அனைத்து சுற்றுலா தலங்களும் திறந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் சற்று அதிகமாகி சுற்றுலாத் தலங்களில் உள்ள புகைப்படக் கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படும் என புகைப்பட கலைஞர்கள் தெரிவித்தனர். மேலும் அரசு தற்போது கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களுக்கான நடைமுறைகளை அறிவித்துள்ளது அதேசமயம் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் கட்டுப்பாடுகளுடன் திறக்க நடவடிக்கை எடுத்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 56

0

0