ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூட்டுறவு சர்க்கரை ஆலை நுழைவுவாயில் முன்பு அறப்போராட்டம்

Author: Udhayakumar Raman
24 June 2021, 3:56 pm
Quick Share

வேலூர்: காட்பாடி அம்முண்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்காததை கண்டித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சர்க்கரை நுழைவாயில் முன்பு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அம்முண்டி என்ற இடத்தில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தினக்கூலியாக நிரந்தர பணியாளர்களாக பணி செய்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 10 முதல் 30 ஆண்டுகள் வரை பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, பணிக்கொடை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ஆலை நிர்வாகம் இதுவரை அவர்களுக்கு தேவையான பணிக்கொடை வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

சுமார் இரண்டு கோடி ரூபாய் வரை பணிக்கொடை நிலுவைத்தொகை இருப்பதாகவும் ஆலை நிர்வாகம் அதனை கண்டுகொள்ளவில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சுமார் இரண்டு கோடி ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கூட்டுறவு சர்க்கரை ஆலை நுழைவுவாயில் முன்பு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Views: - 380

0

0