தொழிற்சாலையில் மீண்டும் வேலை தர வலியுறுத்தி தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலை மறியல்

7 August 2020, 10:35 pm
Quick Share

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை தர வலியுறுத்தி தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த தனியார் நிறுவனத்தில் 250 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கு கொடுக்க வேண்டிய ஊதிய உயர்வை கேட்பதற்காக புதிதாக சங்கம் ஒன்றை அமைத்து உள்ளனர். புதிதாக சங்கம் உருவாக்கப்பட்டதை விரும்பாத தொழிற்சாலை நிர்வாகத்தினர் பணிபுரிந்த 50 பணியாளர்களையும் வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கடந்த சில ஆண்டுகளாகவே தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும் தொழிலாளர்களுக்கும் அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்பட்டு தொழிலாளர்கள் சில நாட்களாக நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இதுவரை அவர்களுக்கு வேலை தருவதற்கு நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருங்காட்டுக்கோட்டை பகுதியில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தாருடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற் பட்டோரை கைது செய்தனர். பின்பு அவர்களை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதன் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 5

0

0