கோவையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகள் மீட்பு: 3 கொள்ளையர்கள் கைது

1 December 2020, 7:31 pm
Quick Share

கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருடு போன வாகனங் களை கண்டுபிடிக்கும் பொருட்டு கோவை மாவட்ட எஸ்.பி.அருளரசு அறிவுரையின் படி,பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ்,எஸ்.ஐ.ஆனந்தகுமார், எஸ்.எஸ்.ஐ.க்கள் சசிக்குமார், லூர்துராஜ், தலைமைக்காவலர் மகேந்திரன் மற்றும் காவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கோட்டைப்பிரிவு ரயில்வே பாலம் அருகே இன்று தனிப்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது,அவ்வழியே வந்த காரை நிறுத்த முயன்ற போது நிறுத்தாமல் சென்றுள்ளனர். போலீசார் விரட்டிச்சென்று பிடித்து விசாரணை மேற்கொண்டதில், காரில் வந்தவர்கள் வெள்ளமடையை சேர்ந்த செந்தில் என்ற பால்கார செந்தில், அவரது மகன் மணிகண்டன் மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அபுல்லா என்ற முகமது என்பதும் தெரிய வந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில், மூவரும் பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்கள், தங்க நகைகள் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.பின்னர்,மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். போலீசாரின் வாகன சோதனையில் பிடிபட்ட மூவர் மீதும் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 16

0

0