தேர்தல் பாக்கி கேட்ட கார் ஓட்டுனரை விரட்டியடித்த ஆர்டிஓ – மன உளைச்சலில் ஆட்சியரிடம் காரை ஒப்படைக்க வந்த ஓட்டுநர்
Author: kavin kumar28 September 2021, 1:56 pm
கடந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் பணிக்காக தமிழகம் முழுவதும் அரசு கார் பயன்படுத்தி வந்த நிலையில் வெளியில் வாடகை கார் எடுத்து அரசு பணிக்கு பயன்படுத்தி வந்தனர். இதேபோல் திருச்சியில் தேர்தலுக்காக திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் சண்முகம் என்பவரது காரை லால்குடி தேர்தல் அதிகாரிக்கு வாடகைக்கு எடுத்து இருந்தார். ஒரு நாளைக்கு ரூபா 1500 வீதம் 10 நாட்களுக்கு வாடகையாக 15 ஆயிரம் ரூபாய் தர வேண்டி இருந்தது. இதனை கேட்டு அவர் பல முறை லால்குடி ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார். ஆனால் உரிய பதில் கிடைக்கவில்லை. ஒருமுறை ஆர்டிஓவை சந்தித்து தனது வாடகை பாக்கியை கொடுக்க வேண்டும் கேட்டபொழுது அவர் சண்முகத்தை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு இன்று திருச்சி மாவட்ட ஆட்சியடர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது காரை ஒப்படைக்க வந்தார். எனக்கு வாடகை பாக்கி வழங்காததால், எனவே அரசே எனது காரை எடுத்துக்கொள்ளட்டும் என்று கூறி காரை நிறுத்தி செல்ல முயன்றார். பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்ததை தொடர்ந்து அவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதுகுறித்து செய்தியாளர்கள் பேட்டி அளித்த சண்முகம், வாடகை பாக்கி 15 ஆயிரம் ரூபாய் உள்ளதால் நான் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். அரசு பணம் தந்தாலும் இடையில் உள்ள ஏஜெண்டுகள் ஏமாற்றி வருகின்றனர். எனவே அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து எனது வாடகை பாக்கி பணத்தை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தார்.
0
0