மகேந்திரன் மரணம் குறித்து ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை..? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி…

7 August 2020, 10:57 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: மகேந்திரன் மரணம் குறித்து முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், முழு விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” 2020 கடந்த மே 18 ஆம் தேதி கொலை வழக்கொன்று தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கில் மகன் துரைக்கு தொடர்பு இருப்பதாக கூறி உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் மே 22ஆம் தேதி எனது வீட்டிற்கு வந்து எனது மகன் துரை பற்றி விசாரித்தார்.

மே 23 ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் எனது சகோதரி வீட்டிற்கு சென்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோர் எனது மகன் துரை இல்லாத நிலையில் இளையமகன் மகேந்திரனை அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். 2 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் அவரது தலை உட்பட பல இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் 24ம் தேதி இரவு பத்து முப்பது மணி அளவில் அவரை விடுவித்தனர்.

ஏறத்தாழ சுயநினைவை இழக்கும் அளவிற்கு தாக்கப்பட்ட நிலையில் வசதி இல்லாத காரணத்தால் மகனை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் உடல் நலம் மிகவும் மோசம் அடையவே, மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஜூன் 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தால் நீதிமன்ற காவலில் இருக்கும் எனது மகன் துரையும் விடுவிக்க மாட்டோம் என மிரட்டினர். அதனால் அஞ்சி எவ்வித புகாரும் அளிக்கவில்லை.

இந்நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்திருக்கும் நிலையில் அதைத் தொடர்ந்து மூன்று கிராம பஞ்சாயத்து மற்றும் ஊர் பெரியவர்களுடன் இணைந்து எனது மகன் இறப்பு குறித்து முறையாக விசாரித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.


காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே எனது மகன் மகேந்திரன்  உயிரிழந்தான். ஆகவே எனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவும் எனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில், விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, தற்போது வரை ஏன் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, சிபிசிஐடி யின் பதில் திருப்தியளிக்கவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், முழு விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி க்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

Views: - 5

0

0